இருளில் மூழ்கிய வைப்பூர் சாலை

குன்றத்துார் அருகே வைப்பூரில் மழை காரணமாக தெருவிளக்குகள் பழுதானதால், பொதுமக்கள் இரவுநேரத்தில் சிரமப்படுகின்றனர்.

Update: 2024-06-16 06:06 GMT

 குன்றத்துார் அருகே வைப்பூரில் மழை காரணமாக தெருவிளக்குகள் பழுதானதால், பொதுமக்கள் இரவுநேரத்தில் சிரமப்படுகின்றனர்.  

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் ஒன்றியம், வைப்பூர் கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியினர் தங்களின் அன்றாட தேவைக்காக, மேட்டுத்தெரு பிரதான சாலை வழியாக சென்று வருகின்றனர். இந்த நிலையில், கடந்த வாரம் இடியுடன் பெய்த கன மழையினால், பிரதான சாலையில் உள்ள அனைத்து மின் விளக்குகளும் பழுதானது. இதனால், ஒரு வாரமாக, மின் விளக்கு எரியாததால், சாலை இருளில் மூழ்கி உள்ளது.

இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள், இருள் சூழ்ந்த சாலையில் கடும் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள், கரடு முரடான சாலையில், மேடு பள்ளம் தெரியாமல், விழுந்து விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். மேலும், இரவு நேரத்தில் இவ்வழியாக நடந்து செல்லும் பெண்கள், வழிப்பறி, நகை பறிப்பு அச்சத்தில் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள், ஆய்வு மேற்கொண்டு, பழுதான மின் விளக்குகளை சரிசெய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, 'ஊராட்சியில் போதிய நிதி இல்லாததால், புதிய மின் விளக்குகள் வாங்குவதற்கு தாமதமாகின்றது. புதிய மின்விளக்கு மாற்றி அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்தனர்.

Tags:    

Similar News