கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விஏஓ புகார்
தென்னிலை மேற்கு- அனுமதி இன்றி செயல்படும் கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விஏஓ புகார் அளித்துள்ளார்.
கரூர் மாவட்டம், புகலூர் தாலுக்கா, தென்னிலை மேல் பாகம் கிராம நிர்வாக அலுவலர் மணிமேகலை நேற்று புகலூர் வட்டாட்சியர் முருகன் -க்கு ஒரு புகார் மனு ஒன்றை அனுப்பி உள்ளார்.
அந்த புகாரில், தென்னிலை மேற்கு கிராமத்தில் வசித்து வரும் கிட்டுசாமி மகன் தங்கவேல், சின்னப்ப கவுண்டர் மகன் குப்புசாமி ஆகியோரது நிலத்தில் மகாலட்சுமி கல்குவாரி என்ற பெயரில் கடந்த 2018 ஆகஸ்ட் 7- முதல் அனுமதி பெற்று இயங்கி வந்தது.
இதற்கான அனுமதி 2023 ஆகஸ்ட் 6ஆம் தேதியோடு முடிந்துவிட்டது. அனுமதி காலம் முடிந்த பிறகும், அந்த குவாரி அனுமதி பெறாமல் இயங்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, தென்னிலை மேல் பாகம் கிராம நிர்வாக அலுவலர் மணிமேகலை சம்பந்தப்பட்ட குவாரி உரிமையாளரிடம் சென்று, முறையாக அனுமதி பெற்று இயக்க வேண்டும் என பலமுறை நேரில் சென்று தெரிவித்துள்ளார்.
இறுதியாக நேற்றும் சென்று அனுமதி பெற்று இயக்குமாறு தெரிவித்துள்ளார். ஆயினும்,அவர்கள் அனுமதி பெறாதால் இது குறித்து புகலூர் வட்டாட்சியர் முருகனுக்கு தனது புகார் அறிக்கையை கிராம நிர்வாக அலுவலர் அனுப்பி வைத்துள்ளார். அதில்,அனுமதி பெறாமல் செயல்படும் மகாலட்சுமி கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.