வேலூரில் லாரி ஓட்டுனருக்கு அரிவாள் வெட்டு: 3 பேர் கைது
வேலூரில் பட்டப் பகலில் லாரி ஓட்டுனரை அரிவாளால் வெட்டிய மூன்று பேரை சத்துவாச்சாரி போலீசார் கைது செய்துள்ளனர்.
வேலூர் சத்துவாச்சாரியில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் அலமேலுமங்காபுரம் கொல்லைமேடு பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் முத்துகிருஷ்ணன் நேற்று முன்தினம் வாகனம் பழுது பார்க்கும் கடையில் இருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த ஏரியூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் தலைமையிலான கும்பல் முத்துகிருஷ்ணனை அறிவாளால் சரமாரியாக தாக்கி விட்டு சென்றுள்ளனர். அதில் படுகாயம் அடைந்த முத்துக்கிருஷ்ணன் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.
இது குறித்து சத்துவாச்சாரி காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. மேலும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில் ஏரி யூரை சேர்ந்த சக்திவேல் (30), மணிகண்டன் (28), அசோக் (28) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இதில் தொடர்புடைய 2 பேரை தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், சக்திவேலின் உறவினர் ஒருவரை முத்துகிருஷ்ணன் மற்றும் அவரது தரப்பினர் தாக்கி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் தரப்பினர் முத்துகிருஷ்ணன் மீது தாக்குதல் நடத்தியது முதல்கட்ட விசாரணை யில் தெரியவந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு நடந்த திரவுபதி அம்மன் கோவில் விழாவில் ஏற்பட்ட இருதரப்பு பிரச்சினையில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதாக என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.