பைக் விபத்தில் கிராம நிர்வாக அலுவலர் பலி!
கோவில்பட்டி அருகே பைக்குகள் மோதிய விபத்தில் காயமடைந்த கிராம நிர்வாக அலுவலர் உயிரிழந்தார்.
Update: 2024-07-05 05:11 GMT
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே வில்லிசேரி ஆசூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துவீரன் மகன் ஆனந்தராஜ் (36). குருமலை கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வந்த அவர், பணியிட மாறுதல் தொடர்பாக கடந்த 27ஆம் தேதி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்துக்குச் சென்றுவிட்டு பைக்கில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாராம். மதுரை- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி அருகேயுள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே இவரது பைக்கும், இளையரசனேந்தலைச் சேர்ந்த பொன்ராஜ் என்பவர் ஓட்டிவந்த பைக்கும் மோதினவாம். இதில், காயமடைந்த ஆனந்தராஜ் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, பொன்ராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.