நத்தம் அருகே தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள், கிராமங்களில் கருப்புக் கொடி கட்டி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.

Update: 2024-04-19 07:40 GMT

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஊராளிபட்டி ஊராட்சியில் உள்ள சீரகம்பட்டியில் கடந்த 20 ஆண்டுகளாக எந்த விதமான அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என மக்கள் குற்றம்சாட்டி வந்தனர். இதனால் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக அவர்கள் அறிவித்தனர். ஆனால், அப்போதும் அதிகாரிகள் தங்கள் பகுதிக்கு வந்து குறைகளை கேட்கவில்லை என வருத்தம் தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், 300-க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி தேர்தலை புறக்கணித்துள்ளனர். தொடர்ந்து ஊர் மந்தையில் உள்ள கோயில் அருகே தரையில் அமர்ந்து கண்டன முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்த நத்தம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த கிராமத்தில் ஆண், பெண் என மொத்தம் 455 வாக்காளர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News