வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய இருவர் கைது
சந்தேகத்தில் விசாரணைக்கு அழைத்து சென்றவர்கள் கைது
விழுப்புரத்தை அடுத்த கெடார் அருகே உள்ள வாழப்பட்டு விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (45). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு கூலி வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர் ஜெயக்குமார் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டுப்போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர், கெடார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில், அதே கிராமத்தை சேர்ந்த சிலர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் கெடார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டதோடு சந்தேகத்தின் பேரில் வாழப்பட்டு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மணி மகன் மகாலிங்கம் (வயது 19), தர்மன் மகன் ஜெயக்குமார் (22) ஆகிய இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துவந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில்இருவரும், சவுந்தர்ராஜன் வீட்டில் இருந்த நகை, பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து மகாலிங்கம், ஜெயக்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 1 சவரன் நகை மற்றும் ரூ.23 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.