பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை
'இடைநிற்றல் என்பது மாணவனின் எதிர்காலத்தைத் தாண்டி சமூகத்தின் எதிர்காலத்தை பாதிக்கும்';
விருதுநகர் மருத்துவக்கல்லூரியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர்களுக்கான மாநாடு மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்டத்தில் உள்ள 11 வட்டாரங்களை சேர்ந்த 1300 பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் பேசிய ஆட்சியர், பள்ளிக்கல்வி இறுதித் தேர்வில் விருதுநகர் மாவட்டம் தொடர்ந்து மாநில அளவில் தேர்ச்சி விகிதத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்தாலும் சராசரி மதிப்பெண் அடிப்படையில் 10 வது இடத்தில் தான் உள்ளது.
இந்நிலையை மாற்ற பள்ளி மேலாண்மைக் குழு முயற்சிக்க வேண்டும் என்றும் பள்ளிகளில் இடைநிற்றல் மாணவர்கள் சமூகத்திற்கு எதிரான குற்றவாளிகளாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் மென்போதை பழக்கத்திற்கு ஆளாக வாய்ப்பு உள்ளது என்றும், மாவட்டத்தில் 1500 மாணவர்கள் 10,11 மற்றும் 12 வகுப்புகளில் உள்ளதால், இடைநிற்றல் என்பது மாணவனின் எதிர்காலத்தைத் தாண்டி சமூகத்தின் எதிர்காலத்தை பாதிக்கும் எனவே பள்ளி மேலாண்மைக் குழு, பள்ளி சூழலை மாற்ற, கற்றல் கற்பித்தல் சிறப்பாக நடக்க இடைநிற்றல் இல்லாமல் செய்ய முயற்சிக்க வேண்டும் என்றார்.
மாநாட்டில் சிறப்பாக செயல்பட்ட 25 பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கி கெளரவித்தார்.முன்னதாக பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முதன்மைக்கல்வி அலுவலர் வளர்மதி செய்திருந்தார்.