குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ சிரப், ஓ,ஆர்.எஸ். கரைசல் வழங்கல் - ஆட்சியர் துவக்கி வைப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் 6 மாதம் முதல் 60 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் மற்றும் ஓ,ஆர்.எஸ். கரைசல் வழங்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் கற்பகம் தொடங்கி வைத்தார்.

Update: 2024-07-02 07:54 GMT

பெரம்பலூர் மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் 6 மாதம் முதல் 60 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் மற்றும் ஓ,ஆர்.எஸ். கரைசல் வழங்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் கற்பகம், நேற்று பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் முன்னிலையில் எளம்பலூர் ஊராட்சி இந்திரா நகர் குழந்தைகள் மையத்தில் தொடங்கி வைத்தார்.

பின்னர், வைட்டமின் ஏ திரவம் மற்றும் ஓ.ஆர்.எஸ் கரைசல் உள்ளிட்டவைகளால் ஏற்படும் நன்மைகள் குறித்த துண்டு பிரசுரங்களை குழந்தைகளின் பெற்றோருக்கு மாவட்ட ஆட்சியரும், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினரும் வழங்கினார்கள், பெரம்பலூர் மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் வயிற்றுபோக்கு நோய் ஏற்படாமல் தடுக்கும் முறைகளின் முக்கியத்துவம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கிராமத்தில் கழிவு நீர் கால்வாய்கள் சரியாக பராமரிக்கப்படுகின்றதா எனவும், பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று குடிநீரின் தரம் குறித்து குடித்துப்பார்த்தும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். மேலும், அப்பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும் உத்தரவிட்டார். இந்நிகழ்வில், மாவட்ட சுகாதார அலுவலர் பிரதாப் குமார், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் ஜெயஸ்ரீ, வட்டார அலுவலர் பிரேமா, எளம்பலூர் ஊராட்சி மன்றத்தலைவர் சித்ராதேவி குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News