விருத்தபுரீஸ்வரர் சமேத தர்மசம்வர்த்தினி கோவில் மாசி தேர் திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் சிறப்பு பெற்ற விருத்தபுரீஸ்வரர் சமேத தர்மசம்வர்த்தினி கோவில் நடைபெற்ற தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2024-02-23 09:02 GMT

தேர் திருவிழா 

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் சிறப்பு பெற்ற விருத்தபுரீஸ்வரர் சமேத தர்மசம்வர்த்தினி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல நிகழாண்டும் திருவிழா கடந்த 15ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதைதொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து விழா நாட்களில் மண்டகபடிதாரர்கள் சார்பில் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. விழா நாட்களில் உபயதாரர்கள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் முதல் தேரில் சுவாமி(விருத்தபுரீஸ்வரர்), மற்றொரு தேரில் அம்பாள் எழுந்தருளினார்கள். இதையடுத்து மேள, தாளம் மங்கள இசை முழங்க வாணவேடிக்கையுடன் தேரோட்டம் நடைபெற்றது தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி தேர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக ஆடி, அசைந்தபடி வலம் வந்தது. வழி நெடுகிலும் பக்தர்கள் கூடி நின்று தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்ற தேங்காய், பூ, பழம் வைத்து சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

பல்வேறு வீதிகளில் வழியாக 1.30 மணி நேரம் வலம் வந்த தேர் நிலையை வந்தடைந்தது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அர்ச்சனை ஆராதனை நடைபெற்றது. விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி வழிபாடு செய்தனர் விழாவை ஒட்டி உபயதாரர்கள் சார்பில் ஆங்காங்கே பந்தல் அமைத்து நீர்,மோர், பாணக்கம் பக்தர்களுக்கு வழங்கினர்

Tags:    

Similar News