போக்சோ வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி நடுகடலில் கைது
கொல்லங்கோடு அருகே போக்ஸோ வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை மரைன் போலீஸார் நடுக்கடலில் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த பிளஸ் டூ மாணவி கேரள மாநிலம் பொழியூர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். இவர் உறவினர் வீட்டுக்கு சென்று வருவதை அதே பகுதியை சேர்ந்தவர் வாலிபர் வின்சென்(24) பார்த்து ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவி பள்ளிக்கு செல்லும் வழியில் வின்சென் தனது காதலை மாணவியிடம் கூறியுள்ளார். இதனை மாணவியின் வீட்டினர் கண்டித்தனர்.
தொடர்ந்து மாணவியின் தந்தை வெளிநாடு சென்று விட்டார். கடந்த அக்டோபர் மாதம் 10ம் தேதி மாணவி பள்ளிக்கு செல்லும்போது வின்சென் மீண்டும் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி மாலை வீடு வந்து மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். வீட்டினர் அவரை மீட்டு பாறசாலையில் ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த சம்பவத்தால் பயந்து போன மாணவியின் தாய் குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார்.
இதனடிப்படையில் போலீசார் வின்சென் மீது போக்சோ மற்றும் மாணவியை தற்கொலைக்கு தூண்டியது உள்பட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான வின்சென்னை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் அவர் விசைபடகில் சுற்றி வருவதாக கிடைத்த தகவலின்பேரில் தனிப்படையினர் கேரள மாநிலம் விழிஞம் துறைமுகத்தில் மரைன் போலீஸாரின் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது விழிஞம் நடுகடலில் வைத்து வின்சென் மறைவாக இருந்த படகை கண்டனர். உடனே மரைன் போலீஸாரின் படகு மூலம் சுற்றிவளைக்கப்பட்டு வின்சென் கைது செய்யப்பட்டு குளச்சல் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வரப்பட்டார். விசாரணைக்குபின் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.