சிவகங்கை : குப்பையால் குடிநீர் மாசுபாடு - பொதுமக்கள் புகார்
காவிரி கூட்டு குடிநீர் கிணறு அருகே குப்பை கொட்டுவதால் தண்ணீர் மாசுபாடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்
திருப்பாச்சேத்தியில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட கிணறு அருகே குப்பையை கொட்டி வருவதால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடு நிலவி வருகிறது. திருப்பாச்சேத்தியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். திருப்பாச்சேத்தி வழியாக நான்கு வழிச்சாலை செல்வதால் இருபுறமும் ஏராளமான கடைகள் அமைந்துள்ளன. தினசரி திருப்பாச்சேத்தி நகர்பகுதி, நான்கு வழிச்சாலையில் சேகரிக்கப்படும் குப்பை அனைத்தும் திருப்பாச்சேத்தி இசேவை மையம் அருகே குவித்து வைக்கப்பட்டுள்ளன. இசேவை மையம் அருகே வருடத்தில் நான்கு மாதங்கள் தற்காலிக நெல் கொள்முதல் மையம் செயல்பட உள்ளது. அருகிலேயே கால்நடை மருந்தகமும் உள்ளது.
குப்பையை தரம் பிரிக்காமல் மொத்தமாக கொட்டி சற்று காய்ந்த உடன் தீ வைத்து அழிக்கின்றனர். மழை காலங்களில் குப்பையில் இருந்து மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து கருப்பு நிறத்தில் விவசாய நிலங்களில் சேர்கிறது. காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் கிணறு இசேவை மையம் அருகே அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து குப்பையை கொட்டுவதால் குடிநீர் திட்ட கிணற்றில் தண்ணீரும் மாசுபடும் அபாயம் உள்ளது. எனவே திருப்பாச்சேத்தியில் குப்பைகளை கொட்ட மாற்று இடம் தேர்வு செய்ய வேண்டும், குப்பைகளை தரம் பிரித்து அழிக்க நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.