சுங்கச்சாவடிகளை அகற்றுவோம் - அமைச்சர் அன்பில் மகேஸ்
மக்களவை தேர்தலில் ஒட்டுமொத்தமாக இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் சுங்கச்சாவடிகளை அகற்றுவோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ச.முரசொலிக்கு ஆதரவாக திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்த அவர் சானூரப்பட்டியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: தமிழகம் முழுவதும் திமுகவுக்கு எழுச்சியாக இருக்கிறது. தமிழக முதல்வர் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் செல்லும்போது மற்ற மாவட்டங்களை விட கூட்டம் விஞ்சக்கூடிய அளவுக்கு உள்ளது.
குறிப்பாக பெண்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. தமிழ்நாடு அரசின் திட்டங்களைப் பிரதிபலிக்கும் விதமாக இக்கூட்டங்களைப் பார்க்கிறோம். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு விடியல் பயணத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், சுய உதவிக் குழுக்களுக்கு பழைய கடன்களைத் தள்ளுபடி செய்து புதிய கடனுதவி திட்டம் உள்பட பெண்கள் சார்ந்த எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை குறைப்போம் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் சுங்கச்சாவடிகளை அகற்றுவோம். ஆனால், பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் வாக்குச் சாவடிகளை அவர்கள் எடுத்துச் சென்றுவிடுவர். பத்து ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 310 க்கு விற்கப்பட்ட சமையல் எரிவாயு உருளை விலை இப்போது ரூ. 1,100 வரை அதிகரித்தது. தற்போது தேர்தல் நேரம் என்பதால், மகளிர் தினத்தையொட்டி ரூ. 100 குறைக்கிறோம் என பிரதமர் அறிவித்துள்ளார். இதையெல்லாம் மக்கள் நம்பாமல் விழிப்புணர்வுடன் இருக்கின்றனர். எனவே, இந்த முறை தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றார் அமைச்சர். இப்பிரசாரத்தில் மனித நேய ஜனநாயக கட்சி பொதுச் செயலர் மு. தமிமுன் அன்சாரி, திமுக மத்திய மாவட்டச் செயலர் துரை.சந்திரசேகரன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.