மக்கள் தொடர்பு திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்
மக்கள் தொடர்பு திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகளை டி.ஆா்.ஓ ரெ.சுமன் வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், படவீடு கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 306 பயனாளிகளுக்கு ரூ.2.11 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன் வழங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவரின் மக்கள் தொடர்பு முகாம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது புதன்கிழமை நடத்தப்பட வேண்டும் என்றும், இந்த முகாம்கள் அப்பகுதி மக்களின் தீர்க்கப்படாத கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கவும், அரசின் அனைத்து திட்டங்கள் குறித்தும் அனைத்து துறைகளின் மூலமாக கண்காட்சி அமைத்து பொதுமக்களுக்கு திட்டங்கள் குறித்து விளக்கப்படவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், குமாரபாளையம் வட்டம், படவீடு கிராமத்தில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடைபெறுகிறது.
மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடைபெற உள்ளதையொட்டி, இப்பகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஒரு மாத காலத்திற்கு முன் வருவாய் கோட்டாட்சியர், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஆகிய துணை ஆட்சியர் நிலையில் உள்ள அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் படவீடு கிராம பகுதிக்கு வந்து கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து மனுக்களை பெற்று வந்தனர். மேலும் அந்த மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு கள ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தேவையான பிற ஆவணங்கள் மனுதாரரிடமிருந்தும், வருவாய்த்துறை அலுவலர்களிடமிருந்தும் பெறப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டியிருந்தால் அந்த பணிகளையும் விரைந்து மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் பல்வேறு துறை சார்பில் 306 பயனாளிகளுக்கு ரூ.2.11 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன் வழங்கினார். இம்முகாமில் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சே.சுகந்தி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சு.பிரபாகரன், படவீடு பேரூராட்சி தலைவர் செ.ராதாமணி, பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளா் நாச்சிமுத்து மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.