சாத்தணஞ்சேரி தடுப்பணை உயரத்தை அதிகரிப்பது எப்போது?

சாத்தணஞ்சேரி பாலாற்று நீர் செறிவூட்டும் அணையின் மேல்மட்ட உயரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-06-02 08:11 GMT

சாத்தணஞ்சேரி தடுப்பணை 

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், சாத்தணஞ்சேரி கிராமத்தைச் சுற்றி சீட்டணஞ்சேரி, பினாயூர் உள்ளிட்ட கிராம விவசாயிகள், பாலாற்று பாசனத்தை நம்பி, பல ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்கின்றனர். பருவமழை காலத்தில் பெய்யும் அதிகப்படியான மழையால், பாலாற்றில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து, இப்பகுதி விவசாயிகள் முப்போகம் சாகுபடி செய்வது வழக்கம். அதே சமயத்தில், மழை குறைவாக பெய்யும் ஆண்டுகளில், பாலாற்று விவசாய நிலங்களின் சாகுபடி பாதிக்கும்.

இதனால், இப்பகுதி பாலாற்றில் தடுப்பணை கட்டி, நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க வேண்டும் என, விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று, 2014 - -15ம் ஆண்டில், சாத்தணஞ்சேரி- - தேவனுார் பாலாற்றின் குறுக்கே, 16 கோடி ரூபாய் செலவில், 800 மீட்டர் நீளத்தில், 8 மீட்டர் ஆழம் உடைய, நீர் செறிவூட்டும் தரை கீழ் தடுப்பணை கட்டப்பட்டது. இந்த தடுப்பணையால் மழைக்காலங்களில், இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, பாலாற்றை சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கிடைத்து வருகிறது. எனினும், தடுப்பணையின் மேல்மட்ட உயரம், குறைவாக உள்ளதாகவும், அதை உயர்த்தினால், ஆற்றின் மேல்மட்டத்திலும் தண்ணீர் தேங்கி, கோடைக்காலத்திலும் சாகுபடி செய்ய ஏதுவாக இருக்கும் என, இப்பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

எனவே, சாத்தணஞ்சேரி பாலாற்று நீர் செறிவூட்டும் அணையின் மேல்மட்ட உயரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

Tags:    

Similar News