பாபநாசம் அருகே நெல், கரும்பு பயிரை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகள்

பாபநாசம் அருகே நெல், கரும்பு பயிரை காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தி வருகிறது.

Update: 2024-01-01 09:28 GMT
நெல் பயிரை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகள்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் மற்றும் கரும்புகளை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருகின்றன. எனவே காட்டுப்பன்றிகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகாவில் உள்ள பாபநாசம், அய்யம்பேட்டை, சக்கராப் பள்ளி, உள்ளிக்கடை, மாகாளிபுரம், இலுப்பக்கோரை உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் நெற்பயிரும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும், தனியாரிடம் வட்டிக்கு கடன் வாங்கியும் கரும்பு பயிர் சாகுபடி செய்துள்ளனர். தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உள்ள கரும்புகள் அனைத்தும் அறுவடைக்கு தயாராக உள்ளது. இதேபோல் நெற்பயிரும் அறுவடை நிலையில் உள்ளது.

இந்நிலையில் காட்டுப்பன்றிகள் கூட்டம், கூட்டமாக வந்து நெல், கரும்பு சாகுபடி செய்யப்பட்டு உள்ள வயல்களுக்குள் புகுந்து நன்றாக விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ள கரும்பு பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. கடந்த சில நாட்களாக காட்டுப்பன்றிகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் கரும்பு பயிரிடப்பட்ட வயல்களில் அதிக அளவில் நஷ்டம் ஏற்படுவதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

எனவே விளைபொருட்களை சேதப்படுத்தி விவசாயிகளுக்கு மிகுந்த பொருள் இழப்பை ஏற்படுத்தி வரும் காட்டுப்பன்றிகளை உடனடியாக பிடித்து வனப்பகுதியில் விட அரசும், மாவட்ட நிர்வாகமும் விரைந்து நடவ டிக்கை எடுக்க வேண்டும் என சக்கராப்பள்ளியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதே கோரிக்கையை பாபநாசம் பகுதியை சேர்ந்த கரும்பு விவசாயிகள் பலரும் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News