அரசு பேருந்தை துரத்திய காட்டு யானை

கிருஷ்ணகிரி, அய்யூர் வனப்பகுதியில் அரசு பேருந்தை காட்டு யானை இடைவிடாது துரத்தியதால், அரை கி.மீ., தூரத்துக்கு ரிவர்ஸில் இயக்கி பயணிகளை பாதுகாத்தார் டிரைவர்.

Update: 2024-05-09 05:22 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் இருந்து பெட்டமுகிலாளம் மலை கிராமத்திற்கு செல்லும் சாலையில் அய்யூர் வனப்பகுதி உள்ளது. மூங்கில் காடுகள் நிறைந்த இந்த வனப்பகுதியில் காட்டு யானைகள், காட்டு எருமைகள், மான்கள், சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்கின்றன. இந்த பகுதியில் வாழும் காட்டு யானைகள் அவ்வப்போது சாலையில் செல்லும் வாகனங்களை வழிமறிப்பதும் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்களை துரத்துவதும் வாடிக்கையாக உள்ளது.

அந்த வகையில் இன்று தேன்கனிக்கோட்டை நகரத்தில் இருந்து பெட்டமுகிலாளம் மலை கிராமத்திற்கு 36 ஆம் நம்பர் அரசு பேருந்து சென்றுள்ளது. இந்த பேருந்தில் 25க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். பேருந்து அய்யூர் வனப்பகுதியில் சாமி ஏரி அருகே சென்றபோது சாலையின் நடுவே காட்டு யானை ஒன்று ஒய்யாரமாக நின்றுள்ளது. இதனை பார்த்த அரசு பேருந்து ஓட்டுனர் தீபக் குமார், பேருந்தை சாலையில் நிறுத்தியுள்ளார்.

அப்போது சர்வ சாதாரணமாக நடந்து வந்த காட்டு யானை ஆக்ரோசத்துடன் பேருந்தை துரத்தி உள்ளது. இதனால் பேருந்தில் இருந்த பொதுமக்கள் கடும் அச்சமடைந்தனர். இதனை பார்த்து சற்றும் சளைக்காத ஓட்டுநர் காட்டு யானையிடமிருந்து பயணிகளை காப்பாற்றும் வகையில் அரசு பேருந்தை அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு பின்னாலே இயக்கி உள்ளார். பேருந்தை துரத்தி வந்த காட்டு யானை சாமி ஏரியில் இருந்த தண்ணீரை பார்த்து திசை மாறி தண்ணீர் குடிக்க ஏரிக்குள் சென்றது. இதனால் பேருந்தில் இருந்தவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதனையடுத்து ஓட்டுனர் அங்கிருந்து பெட்டமுகிலாளம் மலை கிராமம் நோக்கி அரசு பேருந்தை ஒட்டி சென்றுள்ளார்.

Tags:    

Similar News