மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்தில் தனது விவசாய நிலத்தில் விவசாயம் செய்ய விடாமல் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியா முழுவதும் தற்போது நாடாளுமன்ற தேர்தல்-2024 அறிவிக்கப்பட்டு உள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதனால் தர்மபுரி மாவட்டத்தில் ஆட்சியர் தலைமையில் நேரடியாக நடைபெற்று வந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது .
இதனால் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளிப்பதற்கு மனுக்கள் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று வந்த ஒரு பெண் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
அப்போது அவர் மிட்டாரெட்டி அள்ளிபகுதியை சேர்ந்த ஜெயலட்சுமி வயது 57 என்பது தெரியவந்தது. உங்கரான அள்ளியில் தனக்கு விவசாய நிலம் இருப்பதாகவும், அங்கு விவசாயம் செய்யவிடாமல் சிலர் தடுப்பதாகவும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி தீக்குளிக்க முயன்றதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.