திண்டுக்கல் அருகே மரத்தாலான வீரத்தூண் - தொல்லியல் மாணவர்கள் ஆய்வு

திண்டுக்கல் அருகே காப்பிலியப்பட்டியில் உள்ள மரத்தாலான வீரத்தூணை தமிழ்ப் பல்கலைக்கழகத் தொல்லியல் மாணவர்கள் ஆய்வு செய்தனர்.

Update: 2024-04-03 01:29 GMT

தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறையின் முதுகலை மாணவர்கள்  திண்டுக்கல் அருகே காப்பிலியப்பட்டியில் மரத்தாலான ஒரு வீரத்தூணை காப்பிலியப்பட்டியைச் சேர்ந்த முனைவர் நாகராஜ் அளித்த தகவலின் பேரில், முதுகலை தொல்லியல் மாணவர்களும் துறையின் தலைவர் வீ.செல்வகுமார் அடையாளப்படுத்தி ஆய்வு செய்து பதிவு செய்தனர்.

மரத்தால் ஆன இத்தூண் தரை மட்டத்திலிருந்து 2.65 மீட்டர் உயரமுடையது.  தரைக்குக் கீழே சுமார் 4 அடி புதைந்துள்ளதாகக் கூறுகின்றனர்.  இதன் அகலம் 29 செமீ, கனம் 27 செமீ ஆகும். இது  நான்கு புறங்களிலும் 10 சதுரங்கள் என 40 சதுரங்களில் அழகான சிற்பங்களுடன் காணப்படுகிறது.  இதன் மேலே ஒரு சிறிய  நான்கு தூண்களை உடைய மண்டபம் போன்ற அமைப்பும், கபோதம், கழுத்து, சிகரம், கலசம் போன்ற அமைப்புகளுடன் உள்ளது. ஒவ்வொரு சதுரமும் சுமார் 25-28 செமீ அகலம் x 14-15 செமீ உயர அளவில் அமைந்து சுற்றிலும் அணி வேலைப்பாடுடைய 4-5 செமீ அளவுடைய விளிம்புப்பட்டையைக் கொண்டுள்ளது. 

இந்த  நாற்பது சிற்பத் தொகுதிகளில், வில், அம்பு, வேல், கேடயம், வாள் ஆகியவற்றை ஏந்திய வீரர்கள், குதிரை வீரர், பெண்கள், மாடுகளுடனும் புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணர், பன்றி வேட்டையாடுதல் ஆகிய சிற்பங்கள் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன.  மேலே உள்ள சதுரத்தில் கிருஷ்ணர் சிற்பமும் சந்திரன், சூரியன் சிற்ப வடிவங்களும் செதுக்கப்பட்டுள்ளன.  இவ்வூரைச் சேர்ந்த சுப்பையா என்ற 82 வயதான பெரியவர் இத்தூண் தன்னுடைய அப்பாவின் தாத்தா காலத்திற்கு முந்தையது என்று கூறினார்.  எனவே இது 300 ஆண்டுகள் பழமையானதாக இருக்க வாய்ப்புள்ளது. இது அத்தி மரத்தால் செய்யப்பட்டிருக்கலாம் என்று அவர் கூறினார். 

காப்பிலியக்கவுடர் சமூகத்தினர் இதைத் தங்களது குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.  சென்ற மாதம் கோனூரில் இதுபோன்ற ஒரு வீரக்கம்பத்தை தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் கண்டுபிடித்தனர் என்று தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வி. திருவள்ளுவன் கூறினார்.  தமிழ்ப் பல்கலைக்கழகம் இது போன்ற மரபுச்சின்னங்களைப் பதிவு செய்து, தகவல் சேகரித்து ஆய்ந்து வருகின்றது என்றும் அவர் கூறினார். மேலும் பொதுமக்கள் இது போன்ற மரபுச்சின்னங்கள் குறித்து தகவல் அளித்தால் தமிழ்ப் பல்கலைக்கழகம் அவற்றைப் பதிவு செய்யும்" என்றும் தெரிவித்தார்.

Tags:    

Similar News