நீரில் மூழ்கி தொழிலாளி பலி
ஸ்ரீவில்லிபுத்தூரில் திருமுக்குளத்தில் குளிக்கச் சென்ற கூலித் தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் சின்னக்கடை தெருவில் வசித்து வருபவர் முத்துப்பாண்டி வயது 42 செல்வி வயது 34 தம்பதியினர். இவர்களுக்கு 13 வயதில் காவியா, 8 வயதில் முருகன் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். முத்துப்பாண்டி லோடுமேன் வேலை பார்த்து வருகிறார். இவர் வேலை முடித்துவிட்டு தினந்தோறும் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான திருமுக்குளத்தில் குளித்துவிட்டு வீட்டுக்கு செல்வது வழக்கம். அதேபோல் இன்று மதியம் 2 மணி அளவில் குளத்தில் குளிக்க சென்றவர் நிலை தடுமாறி நீருக்குள் மூழ்கியுள்ளார்.
வெகு நேரமாகியும் முத்துப்பாண்டி வீட்டுக்கு வராததால் அவரை உறவினர்கள் தேடிப் பார்த்த நிலையில் குளத்தின் வெளியே அவரது இருசக்கர வாகனம் நின்று கொண்டிருப்பதை பார்த்துள்ளனர். மேலும் அவர் அணிந்திருந்த உடைகள் குளத்திற்கு வெளியே இருந்துள்ளது.பின்னர் சந்தேகம் அடைந்த முத்துப்பாண்டியன் உறவினர்கள் காவல்துறை மற்றும் தீயனைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி முத்துப்பாண்டியன் உடலை மீட்டு காவல்துறையிடம் ஒப்படைத்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குளத்தில் குளிக்கச் சென்ற கூலி தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.