கண்ணை கட்டி சிலம்பம் சுற்றி உலக சாதனை புரிந்த வீரர்கள்
முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்த நாளையொட்டி கண்ணை கட்டி சிலம்பம் சுற்றும் உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது.
முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்த நாளையொட்டி, காஞ்சிபுரம் அஸ்வின் மார்ஷல் ஆர்ட்ஸ் அகாடமி சார்பில், நோபல் உலக சாதனைக்காக, காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில், சிலம்பம் உலக சாதனை நிகழ்ச்சி நேற்று துவங்கியது. உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
இதில், அஸ்வின் மார்ஷல் ஆர்ட்ஸ் அகாடமியில் பயிலும் செல்வம், 24, திவாகர், 23, கோகுல், 21, காமேஷ், 19, சுதர்சன், 18, ஆகிய ஐந்து பேர், காலை 9:00 - மதியம் 2:00 மணி வரை தொடர்ந்து, ஐந்து மணி நேரம் கண்களை கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றினர். மேலும் அரவிந்த் கிருஷ்ணா, 16, நக் ஷத்திரா, 13, தமிமுல் அன்சாரி, 12, மதுமித்ரா, 11, தாரிகா, 11, தருணிகா, 7, மாயா, 7, ஆகிய ஏழு பேரும், காலை 9:00 - நண்பகல் 12:00 மணி வரை, தொடர்ந்து மூன்று மணி நேரம் சிலம்பம் சுற்றினர்.
இதைத் தொடர்ந்து, இந்த சாதனை நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. இக்கலை காஞ்சிபுரத்தில் தோன்றியதால், அதே காஞ்சிக்கு பெருமை சேர்க்கும் வகையில், இச்சாதனையை நிகழ்த்தி உள்ளோம் என, பயிற்சியாளர் அஸ்வின் தெரிவித்தார்.