சின்னத்திரை நடிகர் வீட்டில் தங்க நாணயம் திருடிய வாலிபர் கைது
சேலத்தில் சின்னத்திரை நடிகர் வீட்டில் தங்க நாணயங்கள் திருடிய தர்மபுரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
கைது
சேலம் கோரிமேட்டை அடுத்த கோம்பைப்பட்டி பிருந்தாவனம் கார்டன் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சபரிநாதன் (24). சின்னத்திரை நடிகர். சென்னையில் தங்கி உள்ளார். சில நாட்களுக்கு முன்பு ராஜேந்திரனின் உறவினர் ஒருவர் இறந்து விட்டார். இதையடுத்து அவர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றார். சபரிநாதன் சம்பவத்தன்று சேலம் வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டினுள் சென்று பார்த்த போது அங்கு பீரோ திறந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டு இருந்த ரூ.1 லட்சம், 5 தங்க நாணயங்கள், வெள்ளிப்பொருட்கள் ஆகியவை திருட்டு போனது தெரிந்தது. இது குறித்து சபரிநாதன் அழகாபுரம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு வழக்கில் சம்பந்தப்பட்ட தர்மபுரியை சேர்ந்த மணிகண்டன் (30) என்ற வாலிபர் பணம், தங்க நாணயங்கள் திருட்டில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட மணிகண்டன் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு திருட்டில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது.