லெமூர் பகுதி கடலில் மாயமான வாலிபர் சடலமாக மீட்பு
கடலில் குளிக்க சென்ற இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள லெமூர் கடற்கரை பகுதிக்கு கேரள மாநிலம், திருவனந்தபுரம் பகுதி கல்லுமூடு என்ற இடத்தை சேர்ந்த 6 வாலிபர்கள் நேற்று முன்தினம் ஒரு காரில் சுற்றுலா வந்தனர். மாலையில் அவர்கள் லெமூர் கடற்கரையின் கிழக்குப் பகுதியில் கடலில் குளிக்க இறங்கினர். இதில் நிகில் (24), நிதின் (25), கோகுல் குமார் (23) ஆகிய மூன்று பேர் ஆழமான பகுதிக்கு சென்று விட்டனர்.இதில் நிகில் கடலில் மூழ்கினார்.
இதை பார்த்த நிதின், கோகுல் குமார் ஆகியோர் அவரைக் காப்பாற்ற முயற்சி செய்த போது, அவர்களும் கடலில் மூழ்கத் தொடங்கினர். இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் கடலில் குதித்து நிதின், கோகுல் குமர் ஆகிய இருவரையும் மீட்டனர். ஆனால் நிகிலை மீட்க முடியவில்லை. குளச்சல் மரைன் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் நேற்று இரண்டாவது நாளாக கடல் பகுதியில் வாட்டர் ஸ்கூட்டரில் சென்று தேடும் போது, சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் நிகில் உடல் கடலில் மிதந்த நிலையில் காணப்பட்டது. உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இது குறித்து குளச்சல் மரைன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.