விளையாட்டு மைதானத்தில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்!!
விளையாட்டு மைதானத்தில் மாநகராட்சி குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவொற்றியூர் கரிமேடு தெரு அருகே ரயில்வே துறைக்கு சொந்தமான காலி மைதானத்தில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் விடுமுறை நாட்களில் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். இவ்வாறு விளையாடும் இந்த காலி மைதானத்தில் சென்னை மாநகராட்சி லாரியிலிருந்து குப்பை மற்றும் கட்டிட கழிவுகளை கொண்டு வந்து கொட்டி விடுகின்றனர். இவ்வாறு கொட்டுவதால் அங்கு விளையாட முடியவில்லை என்று இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, இங்கு கட்டிட கழிவுகளை கொட்டக்கூடாது என மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவதற்காக அங்கு வந்தனர். அப்போது அதிகளவில் குப்பை கொட்டப்பட்டிருந்ததால் மைதானத்தில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த வீரர்கள் கிரிக்கெட் மட்டையுடன் மைதானத்தில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது விளையாட்டுத் திடல் வேண்டும், குப்பை கழிவுகளை கொட்டாதே என்று கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவொற்றியூர் எஸ்ஐ நவீன், ‘‘குப்பை கொட்டுவதை தடுத்து, விளையாட்டு மைதானம் அமைத்து தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், குப்பையை வேறு இடத்தில் கொட்டுவதற்கான நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பரபரப்பு ஏற்பட்டது.