போலீஸ் என கூறி டிரைவரை தாக்கி பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது
ஓட்டப்பிடாரம் அருகே போலீஸ் எனக்கூறி டிரைவரை தாக்கி பணம் பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே கவர்னகிரி நடுத்தெருவை சேர்ந்த காளியப்பன் மகன் குணசேகரன் (32). டிரைவர். இவர் தூத்துக்குடியில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குணசேகரன் வேலைக்கு சென்று விட்டு, வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தார்.
பாஞ்சாலங்குறிச்சி விலக்கு அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே சாலையின் நடுவே 2 மர்ம நபர்கள் அவருடைய மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தியிருந்தனர்.
அவர்கள் அருகில் சென்று மோட்டார் சைக்கிளை நிறுத்திய குணசேகரனிடம், அந்த 2 பேரும் நாங்கள் எஸ்.பி.சி.ஐ.டி போலீஸ் என்று கூறிவிட்டு, இரவு நேரத்தில் எங்கே போய் விட்டு வருகிறாய்? என்று கேட்டவாறு அவரை தாக்கினர். இதில் பயந்துபோன குணசேகரன் தனது மோட்டார் சைக்கிள் மற்றும் பையில் இருந்த மணி பர்ஸ் ஆகியவற்றை பறித்து கொண்டனர்.
அப்போது அவர்களிடம் இருந்து தப்பிய குணசேகரன், அருகில் இருந்த ஊருக்கு ஓடிச்சென்று சம்பவம் குறித்து உறவினரிடம் கூறினார். உடனடியாக உறவினர்கள் ஓட்டப்பிடாரம் போலீசில் புகார் செய்தனர். இதன் பேரில் ஓட்டப்பிடராம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அங்கு குணசேகரன் விட்டு சென்ற மணி பர்ஸ் மட்டும் எடுத்து கொண்டு, மோட்டார் சைக்கிளை அதே இடத்தில் விட்டு சென்றிருந்தனர்.
தொடர்ந்து இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், பாஞ்சாலங்குறிச்சியை சேர்ந்த பொன்மகாலிங்கம் (30), சுரேஷ்குமார் (32) ஆகியோர் போலீஸ் என்று கூறி வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. உடனடியாக தலைமறைவாக இருந்த அந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து குணசேகரனின் மணி பர்ஸ் மீட்கப்பட்டது. அதில் ரூ.500 இருந்தது. தொடர் விசாரணையில், கைதான சுரேஷ்குமார் மீது கடந்த ஆண்டு பெண் போலீசாரை கேலி செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் என தெரிய வந்துள்ளது.