சேலம் : 10 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்ட வாலிபர்கள் - போலீசார் விசாரணை
அயோத்தியாப்பட்டணத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆந்திரா மாநிலத்தில் இருந்து சேலத்துக்கு கஞ்சா கடத்தி வந்து விற்கப்படுவதாக நேற்று முன்தினம் மத்திய நுண்ணறிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் ஏட்டுகள் ஸ்ரீதர், கண்ணன், விஜயபாபு ஆகியோர் அயோத்தியாப்பட்டணம் பகுதியில் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் 2 வாலிபர்கள் பைகளுடன் நின்று இருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர்கள் நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் பகுதியை சேர்ந்த ஹரீஸ் (வயது 23), வையப்பமலையை சேர்ந்த தங்கராஜ் (29) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் வைத்திருந்த பைகளை போலீசார் சோதனை செய்தனர். அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். தொடர்ந்து ஹரீஸ், தங்கராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர்கள் 2 பேரும் ஆந்திரா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி சேலத்தில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஹரீஸ், தங்கராஜ் ஆகியோரையும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவையும் மதுவிலக்கு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் கஞ்சா கடத்தல் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.