எங்களுக்கு 5 சீட் கொடுத்தே ஆக வேண்டும்.. இந்திய முஸ்லீம் லீக் கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு போடும் பிரஷர்..
எங்களுக்கு 5 சீட் கொடுத்தே ஆக வேண்டும்.. இந்திய முஸ்லீம் லீக் கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு போடும் பிரஷர்..;
திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்கவுள்ளோம் என இந்திய முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்தில் இருந்தே திமுகவுடன் கூட்டணியில் இருந்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ஐயுஎம்எல் இணையதளத்தில் கூறியிருப்பதாவது: 2026 தேர்தலில் 5 தொகுதிகள் வேண்டும். கடந்த காலங்களில் கலைஞர் காலத்தில் 16 தொகுதிகள் வரை கேட்டுப் பெற்றிருக்கிறோம்.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்குக் குறைந்தது 5 தொகுதிகளாவது ஒதுக்கப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், கடந்த ஆண்டு திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நிலவும் பல்வேறு அரசியல் யூகங்கள் குறித்து அவர் கருத்துரைத்தார். தமிழகத்தை ஆளும் திராவிட மாடல் அரசின் நல்ல காரியங்கள் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், வரவிருக்கும் தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி பெற்று திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
திமுகவுடனான கூட்டணி தேர்தலுக்கானது அல்ல, கொள்கை ரீதியானது என்று காதர் மொய்தீன் வலியுறுத்தினார். "திமுகவுடன் தான் கூட்டணி... வேறு கூட்டணி பற்றி சிந்தித்ததோ, கனவுகூட கண்டதோ கிடையாது" என அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 5 தொகுதிகள் வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது. அதன்படி, திருச்சி, சென்னை, கடலூர், நெல்லை, தஞ்சாவூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஐந்து தொகுதிகளை எதிர்பார்ப்பதாக காதர் மொய்தீன் குறிப்பிட்டார்.
அதிமுக-பாஜக கூட்டணியில் தவெக இணையும் என்ற பேச்சு உள்ளது குறித்து கேட்டதற்கு, "இவை ஒன்றிணைந்தால் திமுகவுக்கு சவாலாக இருக்குமா என்று கேட்டால், தேர்தலே சவாலாகத்தான் இருக்கும்" என்றார் காதர் மொய்தீன். மேலும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சீமான் தனித்து நிற்பார். இதனால் தமிழகத்தில் மும்முனைப் போட்டி நிலவும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
சட்டசபை தேர்தலே சவாலாக இருக்கும் எனத் தெரிவித்த காதர் மொய்தீன், "மக்கள் தான் எஜமானர்கள்" என்றும், திராவிட மாடல் அரசுக்கு அவர்களே வெற்றியைத் தேடித் தருவார்கள் என்றும் உறுதியாகக் கூறினார். மேலும், "பிரச்சாரத்துக்கு வரும் கூட்டம் வாக்குகளாக மாறாது என்பதுதான் கடந்த கால வரலாறு" என்பதையும் அவர் நினைவுகூர்ந்தார்.