விருகம்பாக்கம் தொகுதியில் விஜய்.. சென்னையை பாயின்ட் செய்த தவெக!?
விருகம்பாக்கம் தொகுதியில் விஜய்.. சென்னையை பாயின்ட் செய்த தவெக!?;
தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் முக்கிய பிரமுகர்கள் பலர் தொகுதி மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தவெக தலைவர் விஜய், தலைநகரில் களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரபரக்கின்றன. விஜய், விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு வருவதாக பனையூர் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் இந்த சூழலில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன. கூட்டணி பேச்சுகள், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளன. தமிழக வெற்றி கழகத்திற்கு விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது. இதனை தொடர்ந்து தொண்டர்கள் உற்சாகத்துடன் தங்களது சின்னத்தை மக்களிடம் ஒன்று சேர்க்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது. தவெக தலைவர் விஜய், தலைநகர் சென்னையில் உள்ள விருகம்பாக்கம் சட்டசபை தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பனையூர், நீலாங்கரையில் தான் விஜய் இருப்பார் என்பதால் சென்னை மண்டலத்தில் உள்ள தொகுதியில் போட்டியிடுவதே சரி என நினைகிறாராம்.
ஆளுங்கட்சியான திமுக கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் சென்னையை முழுமையாக கைப்பற்றியது. தலைநகரில் மொத்தம் உள்ள 16 தொகுதிகளையும் ஒட்டுமொத்தமாக வாரிச் சுருட்டியது. சென்னையில் திமுக வொய்ட் வாஷ் செய்த நிலையில், அதில் சிக்கலை ஏற்படுத்த தவெக தலைவர் விஜய் தயாராகி வருகிறாராம். தலைநகரில் ஆதிக்கத்தைக் காட்ட திட்டமிட்டுள்ளாராம்.
சென்னை நகரை பொறுத்தவரை கடந்த முறை வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் என்று திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. அதேசமயம் இதில் விருகம்பாக்கம் தொகுதியில் இது உறுதி இல்லை என்கிறார்கள். விருகம்பாக்கம் தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ பிரபாகர ராஜாவிற்கு பதிலாக தணிக்கை குழு தலைவர் தனசேகரனுக்கு வாய்ப்பளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக சார்பில் கடந்த முறை வெற்றி வாய்ப்பை இழந்த விருகை வி.என். ரவி மீண்டும் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. விருகம்பாக்கம் தொகுதியைப் பொறுத்தவரை பூர்வகுடி மக்களை விட தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் அதிக அளவில் வசிக்கும் தொகுதி.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விஜய், சிறுவயதில் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் தான் வளர்ந்தார். சினிமாவில் வெற்றிகரமான ஒரு ஹீரோவாக வளரும் வரை அந்த வீட்டில் தான் இருந்தார். இதனால் சென்டிமெண்டாக சாலிகிராமம் பகுதி இடம்பெற்றுள்ள விருகம்பாக்கம் தொகுதி தனக்கு வெற்றியை தரும் என்று நினைக்கிறாராம் விஜய்.
மேலும், பல்வேறு சினிமா பரபலங்களும் விருகம்பாக்கம், சாலிகிராமம் மற்றும் வடபழனி பகுதியைச் சுற்றித்தான் உள்ளனர். சினிமா துறையின் சிறு தொழிலாளர்கள், முதல் தயாரிப்பாளர்கள் வரை அனைவரும் இங்கு தான் வசிக்கின்றனர். இதுவும் விஜய்க்கு கூடுதல் வாக்குகளை பெற்று தரும் என்று கூறப்படுகிறது. எனவே, தலைநகரின் விருகம்பாக்கம் தொகுதியில் விஜய் போட்டியிடக்கூடும் என்ற தகவல்கள் பரபரக்கின்றன. தலைநகரில் வெல்வதன் மூலம் ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் வெற்றிக்குறி காட்டவும் விஜய் தயாராகி வருகிறாராம்.