பொய்த்துப்போன பருவ மழை - விதைத்த மக்காச்சோள பயிர்களை அழித்த விவசாயிகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் பருவமழை பொய்த்துப் போன நிலையில், மக்காச்சோள பயிர்களை விவசாயிகள் வயலில் வைத்து அப்படியே உழவு செய்து, அழித்து வரும் அவலம் ஏற்பட்டுள்ளது.

Update: 2023-10-30 05:36 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழக அளவில் மக்காச்சோள சாகுபடியில் பெரம்பலூர் மாவட்டம் சிறப்பிடம் பெற்றுள்ளது அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாக பெரம்பலூர் மாவட்டத்தில் பயிரிடப்பட்டு வரும் மக்காச்சோள பயிர்களில் படைப்புழு தாக்குதல் என்பது மிகப்பெரிய அளவில் பாதிப்பை உருவாக்கி விவசாயிகளுக்கு மிகப்பெரிய அளவிலான நஷ்டங்களை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்களில் படைப்புழு தாக்குதலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதற்கு மருந்து அடித்து விவசாயிகள் ஓரளவுக்கு கட்டுக்குள் வைத்துக் கொண்டிருந்த நிலையில் தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போய் , வடகிழக்கு பருவ மழை துவங்க காலதாமதமாகி வரும் நிலையில் கடந்த ஒன்றரை மாத காலமாக மழையின்றி மானாவாரியில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோள பயிர்கள் அனைத்தும் காய்ந்து வருகிறது. இவ்வாறு வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் மக்காச்சோளப் பயிர்கள் இனி மழை பெய்தாலும் விளைச்சலை தராது என்றும், கதிர் பிடிக்காமலேயே பூ வைத்து விட்டதால் கால்நடைகளுக்கு கூட தீவனமாக பயன்படுத்த முடியாது என்றும் மக்காச்சோள பயிர்களை அப்படியே வயலில் வைத்து டிராக்டர் மூலம் விவசாயிகள் உழவு செய்து அழித்து வருகின்றனர். ஏக்கர் ஒன்றிற்கு உழவு செய்தல், விதை நேர்த்தி, களை எடுத்தல், உரம், பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு செலவீனங்கள் மூலம் சுமார் ரூ.40,000 வரையில் செலவு செய்துள்ள விவசாயிகள் தற்பொழுது மேலும் அதனை அழிப்பதற்கு பல ஆயிரங்களை செலவு செய்து வருகின்றனர். மக்காச்சோளம் பயிர்களில் இருந்து ஒரு ரூபாய் கூட தங்களுக்கு வருமானம் கிடைக்காது என்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் மக்காச்சோள விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகையை முழுமையாக வழங்குவதோடு, நிவாரணத் தொகையும் வழங்கினால் மட்டுமே தொடர்ந்து வேளாண்மை செய்ய முடியும் என்று வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News