திருப்பூர் மாநகராட்சி ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை.

திருப்பூர் மாநகராட்சி ஒப்பந்ததாரர் 15 நாட்களுக்குள் சாலை பணிகளை முடிக்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2024-01-23 05:15 GMT

திருப்பூர் மாநகராட்சி ஒப்பந்ததாரர் 15 நாட்களுக்குள் சாலை பணிகளை முடிக்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பூர், 15 நாட்களுக்குள் நிலுவையில் உள்ள சாலைப்பணிகளை முடிக்காத ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருப்பூர் மாநகராட்சி பகுதி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் மாநகராட்சியில் உள்ள பெரும்பாலான வார்டுகளில் தார்ச்சாலைகள் அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் சாலை பணிகள் முடிக்கப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தினந்தோறும் பல்வேறு பிரச்சனைகளுக்கு உள்ளாகிறார்கள்.

இது தொடர்பாக கவுன்சிலர்கள் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் கமிஷனர் பவன்குமார் ஆகியோரிடம் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சாலை பணிகளை விரைவாக முடிப்பது தொடர்பாக ஒப்பந்ததாரர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. இதற்கு மாநகராட்சி கமிஷனர் பவன் குமார் தலைமை தாங்கி பேசினார். தொடர்ந்து ஒப்பந்ததாரர்களிடம் சாலை பணிகளை விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்தும், சாலை பணிகளை முடிப்பதில் இருக்கும் இடர்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

இது குறித்து மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் கூறியதாவது:- திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பெரும்பாலான சாலை பணிகள் முடிவடைந்துள்ளன. ஆனால் சிறு சிறு வேலைப்பாடுகள் காரணமாக சாலை பணிகள் முழுவதுமாக முடியாமல் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் இந்த சாலை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோல் சாலை பணிகளை தரமாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர்கள் அதிகாரிகளுடன் இணைந்து சாலை பணிகளை முடிக்க வேண்டும். 15 நாட்களுக்குள் நிலுவையில் உள்ள சாலை பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு முடிக்காத ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News