- Home
- /
- ஷாட்ஸ்

டாக்டர் ராமதாஸ் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், அவருக்கு இன்று ஆஞ்சியோ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு வழக்கமான இதய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், ராமதாஸ் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாசை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்ற எடப்பாடி பழனிசாமி அங்கு ராமதாசை சந்தித்து நலம் விசாரித்தார். முன்னதாக, ராமதாசை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் சந்தித்து நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே நாளில் 2 முறை ஏற்றம் கண்ட தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று காலையில் ரூ.880 உயர்ந்த நிலையில், மாலை ரூ.520 உயர்ந்துள்ளது. மொத்தமாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,400 அதிரடியாக உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,125-க்கும் ஒரு சவரன் தங்கம் ரூ.89,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சாலையில் நடந்துசெல்லும் பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாலையில் பாதை மாறி வாகனம் ஓட்டுவோர், தடைசெய்யப்பட்ட ஹாரன்களை பயன்படுத்துவதை தடுக்க விதிகள் அவசியம். நெடுஞ்சாலை தவிர இதர சாலைகளில் வடிவமைப்பு, கட்டுமானம், பராமரிப்பு விதிகளை 6 மாதத்தில் வகுக்கவும் வெள்ளை நிற எல்இடி பல்புகளை முகப்பு விளக்குகளில் பயன்படுத்துவதையும் ஒழுங்குபடுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பீகார் மாநில சட்டசபையின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. எனவே அதற்குள் அங்கு தேர்தலை நடத்த வேண்டியது அவசியம். இதற்கான முன்னேற்பாடுக்ளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில் இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று தெரிவிகிறது. இன்று மாலை செய்தியாளர்களை தேர்தல் ஆணையர்கள் சந்திக்கிறார்கள். அப்போது தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத்தெரிகிறது. பீகார் மாநிலத்தில் மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கு சட்டமன்ற தேர்தல் நடத்தப்படவுள்ளது. பீகாரில் தலைமை தேர்தல் ஆணையர் இரண்டு நாட்கள் ஆய்வு மேற்கொண்ட நிலையில் இன்று மாலை 4 மணிக்கு பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது

இன்று தங்கம் விலை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.88,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.11,060-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.1 உயர்ந்து ரூ.166க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,66,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ரூ.11,000ஐ கடந்ததால் நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாக மாறியது.

செப். 27-ந் தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டார் த.வெ.க. தலைவர் விஜய்.அந்த நேரத்தில், திடீர் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து நடந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் கரூரில் சோகவடு இன்னும் நீங்கவில்லை. அரசியல் கட்சி தலைவர்கள் கரூர் சென்று மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில், தலா ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டது. த.வெ.க. சார்பில் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறவும், ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கவும் விஜய் அடுத்த வாரத்தில் கரூர் செல்ல இருக்கிறார். இதற்காக முறையாக கோர்ட்டில் மனு செய்து, அனுமதி கேட்கப்பட உள்ளது. கோர்ட்டு அனுமதிக்கும் பட்சத்தில் விஜய் அடுத்த வாரத்தில் கரூர் செல்வார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை நினைவில் கொண்டு அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். பருவமழையை எதிர்கொள்ள அரசு அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். கடந்த காலங்களில் வெள்ளப் பாதிப்பு பகுதிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ள பாதிப்பு பகுதிகளில் இருந்து மக்களை முன்கூட்டியே பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டின் 2ஆவது யானை பாகன் கிராமத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கோவை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கோழிக்கமுத்தி யானைகள் முகாமில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. பாகன்கள் மற்றும் யானை பராமரிப்பாளர்களின் நலனுக்காக கட்டப்பட்ட பணியாளர் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன

உத்தரவுகளை பிறப்பிப்பதற்காக நீதிபதிகளும் விமர்சிக்கப்படுகின்றனர் என ஐகோர்ட் நீதிபதி செந்தில்குமார் அதிருப்தி தெரிவித்துள்ளனர். சமூகவலைதளங்களில் யாரையும் விட்டு வைக்காமல் விமர்சிப்பதாக நீதிபதி செந்தில்குமார் கருத்து தெரிவித்துள்ளனர். சமூகவலைதளங்களில் வரும் விமர்சனங்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் நீதிபதி செந்தில்குமார் அறிவுறுத்தி உள்ளார்.

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 772 புதிய வீடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். விருதுநகர், தி.மலை, தூத்துக்குடி, சிவகங்கை மாவட்டங்களில் உள்ள 8 முகாம்களில் புதிய வீடுகள் திறக்கப்பட்டுள்ளன. ரூ.44.48 கோடியில் வீடுகள் கட்டப்பட்டு, ரூ.6.58 கோடியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

23 உயர்நீதிமன்றங்களில் 330 நீதிபதி பணி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள 25 உயர்நீதிமன்றங்களில் 1122 நீதிபதி பணி இடங்களில் 330 இடங்கள் காலியாக உள்ளன. அதிகபட்சமாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 160 நீதிபதி பணி இடங்களில் 76 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதி பணி இடங்களில் 19 நிரப்பப்படாமல் உள்ளன.

அரசியல் கூட்டங்களுக்கு நெறிமுறைகளை வகுக்க கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்திலும் விசாரணை தொடங்கியது. அப்போது "காவல்துறை கண்மூடிக் கொண்டு இருக்க முடியாது. வழக்குப்பதிய என்ன தடை? புகார் இல்லாவிட்டாலும் வழக்குப்பதிய வேண்டும். 2 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர், வேறு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? விஜயின் பரப்புரை வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா?, பேருந்து மோதியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யாவிட்டால் மக்கள் எப்படி நம்புவார்கள்? நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கருணை காட்டுகிறீர்களே?" என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.








