வீட்டை மீட்டு தரக்கோரி பெண் குழந்தைகளுடன் தர்ணா
அரியலூரில் வீட்டை மீட்டு தர கோரி பெண் ஐந்து குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் அருகே தனது வீட்டினை மீட்டுத் தர வலியுறுத்தி, பெண் தனது ஐந்து குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அரியலூர் மாவட்டம் ஆலத்திப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் வேலவன். இவர் திருப்பூரில் பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவரது தந்தை வழி சொத்தை தனது உடன்பிறந்த நான்கு சகோதரர்களுக்கும் பிரித்துக் கொடுத்த நிலையில், தனக்கு உரிய பங்கில் வீடு கட்டி, தனது மனைவி மற்றும் ஐந்து குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் வேலவனின் சகோதரர்கள், தங்களுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி உள்ளீர்கள் என கூறி, வீட்டை பிரித்து சேதப்படுத்தி உள்ளனர். இது குறித்து வேலவனின் மனைவி புஷ்பராணி கடந்த 30-ஆம் தேதி, எனது வீட்டை சேதப்படுத்திய எனது கணவனின் சகோதரர்கள் நான்கு பேர் மீது நடவடிக்கை எடுத்து, எனது வீட்டை மீட்டு தர வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
அம்மனு உடையார்பாளையம் கோட்டாட்சியருக்கு அனுப்பப்பட்ட நிலையில், நீதிமன்றத்தை நாடி வீட்டினை மீட்டுக் கொள்ளுமாறு கோட்டாட்சியர் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த புஷ்பராணி, நீதிமன்றத்தில் வழக்கு போட்டால் தீர்வு கிடைக்க குறைந்தது 15 ஆண்டுகளாவது ஆகும், அதுவரையில் எனது குழந்தைகளுடன் நான் எங்கே தங்குவது என கேள்வி எழுப்பிய புஷ்பராணி, எனது வீட்டை மீட்டு தர வேண்டும் என கூறி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு தனது ஐந்து குழந்தைகள் மற்றும் கணவருடன், தரையில் அமர்ந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவரிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர்.