பள்ளிகளில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஆய்வு
பேராவூரணி பகுதியில் பள்ளிகள் திறப்பை முன்னிட்டு ஆயத்தப் பணிகள் குறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.
கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. விடுமுறை நாட்கள் கழிந்து பள்ளிகள் திறக்கவிருப்பதால், பள்ளிகளில் நடைபெறும் முன் ஆயத்தப் பணிகள் குறித்து, பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கு.திராவிடச்செல்வம் புதன்கிழமை பேராவூரணி பகுதி அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள ஊராட்சி ஒன்றிய வடகிழக்கு தொடக்கப்பள்ளியில், பள்ளி வகுப்பறை கட்டிடம், கழிப்பறை, தண்ணீர் தொட்டி, சத்துணவுக் கூடம், சமையலறை, பள்ளி வளாகம் உள்ளிட்ட இடங்களை அவர் ஆய்வு செய்தார். அப்போது பள்ளி தலைமை ஆசிரியை சித்ரா தேவி, ஆசிரியர்கள் ஹாஜா மைதீன், ரேணுகாதேவி, பள்ளி மேலாண்மை குழு தலைவி ஜசீரா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதுகுறித்து பட்டுக்கோட்டை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கு.திராவிடச் செல்வம் கூறுகையில், "பேராவூரணி, சேதுபாவாசத்திரம், பட்டுக்கோட்டை ஒன்றியங்களில் 17 பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டபடி, பள்ளிகளில் தூய்மைப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டனவா. மாணவர்களின் பாதுகாப்புக்கு ஏதுவாக உள்ளதா எனத் தணிக்கை செய்யப்பட்டு, தேவையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது" என்றார்.