கீரமங்கலத்திலிருந்து கொத்தமங்கலம் வழியாக ஆலங்குடிக்கு பேருந்து இயக்க கோரிக்கை!

பொது பிரச்சனைகள்

Update: 2024-07-18 03:38 GMT
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்திலிருந்து கொத்தமங்கலம் பனசக்காடு வடகாடு வழியாக ஆலங்குடிக்கு அரசுப் பேருந்து இயக்க வேண்டுமென மாணவர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆலங்குடி அரசுக் கல்லூரியானது, சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள வாடகை கட்டடத்தில் இயங்கி வந்தது. கீரமங்கலம், செரியலூர், மேற்பனைக்காடு, குளமங்கலம், பனங்குளம், சேந்தன்குடி, கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இக்கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மேற்பனைக்காடு, கீரமங்கலத்தில் இருந்து கொத்தமங்கலம் வழியாக ஆலங்குடிக்கு இயக்கப்பட்டு வரும் அரசுப்பேருந்துகளில் கல்லூரிக்கு சென்று வந்தனர். தற்போது, ஆலங்குடி அருகேயுள்ள கீழாத்தூர் ஊராட்சி சமத்துவபுரம் அருகே அரசுக் கல்லூரிக்கு சுமார் 12 ஏக்கரில் ரூ.12.40 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் 3 தளங்கள் கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், காணொலி வாயிலாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் புதியஅரசுக் கல்லூரி கட்டடத்தை திறந்துவைத்தார். இதைத் தொடர்ந்து விரைவில், புதிய கட்டடத்துக்கு அரசுக் கல்லூரி மாற்றம் செய்யப்பட உள்ளது. இதனால், அப்பகுதிகளில் இருந்து கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து கீரமங்கலத்துக்கு சென்று, அங்கிருந்து பேருந்தில் புளிச்சங்காடு கைகாட்டிக்கு சென்று, அங்கிருந்து மற்றொரு பேருந்தில் ஏறி கல்லூரிக்கு செல்ல வேண்டும். இல்லையெனில், வழக்கமாக கொத்தமங்கலம் வழியாக இயக்கப்படும் பேருந்துகளில் சென்றால், கல்லாலங்குடி சென்று மீண்டும் மற்றொரு பேருந்தில் பயணித்து கல்லூரிக்கு செல்லவேண்டும். இதனால், அப்பகுதியில் இருந்து கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கீரமங்கலத்தில் இருந்து கொத்தமங்கலம், பனசக்காடு, வடகாடு வழியாக ஆலங்குடிக்கு அரசுப்பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News