திருக்கோவிலூர் கபிலர் நூற்றாண்டு விழா

விழா

Update: 2024-07-21 06:04 GMT
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடப்பிரிவுகளோடு பொது அறிவுத் திறன் வளர்க்கும் கல்வியை கற்றுத் தர வேண்டும் - உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர்.க.பொன்முடி அறிவுறுத்தல். கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் கபிலர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், முன்னிலையில் நேற்று நடைபெற்றது. உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது: திருக்கோவிலூர் கபிலர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு தொடக்க விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். 100 வருடம் ஒரு பள்ளி திருக்கோவிலூரில் இயங்குவது சாதாரண நிகழ்வல்ல. இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் கல்வியில் சிறந்து விளங்கி வருகிறது. அதற்கு காரணம் திராவிட மாடல் ஆட்சி செய்து வரும் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தான். அதற்கு இப்பள்ளியே உதாரணம் ஆகும். 12.07.1924 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளியில் தான் திருக்கோவிலூர் மட்டுமல்லாமல் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள மாணவர்கள் படித்தனர். இப்பள்ளியில் படித்தவர்கள் பெரும்பாலும் ஆசிரியராகவே பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அரசு உயர் பணிகளிலும், பல்வேறு துறைகளிலும், வெளிநாடுகளிலும், மக்கள் பிரதிநிதிகளாகவும் உள்ளனர். அவர்களை எல்லாம் இக்கபிலர் பள்ளி தான் உருவாக்கியது. திருக்கோவிலூர் கபிலர் பள்ளி தான் அன்றைய காலக்கட்டங்களில் சுற்றுவட்டார பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசு பொது தேர்வு மையமாக இருந்தது. 1964 ஆம் ஆண்டு நான் உட்பட 16 மாணவர்கள் கண்டாச்சிபுர பள்ளியில் படித்து இப்பள்ளியில் தான் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினோம். அப்பொழுதெல்லாம் கல்வி கற்பவர்கள் குறைவாகவே இருந்தனர். குறிப்பாக பெண்கள் கல்வி கற்பதற்கு முன்வரவே இல்லை. இவ்வாறாக இருந்த சூழ்நிலையில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்றவர்களின் அரும் பணிகளால் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிப் பெற்றது. இவ்வளர்ச்சியின் காரணமாக தான் இன்று இப்பள்ளியில் 2,052 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதிலும் 12 ஆம் வகுப்பில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இக்கல்வி வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு தான் முக்கிய காரணமாகும். பெண்களும் படிக்க வேண்டும் என்பதற்காகவே திருக்கோவிலூரில் பெண்களுக்கென்றே தனியாக பெண்கள் மேல்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டு பெண்கள் கல்வி கற்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. ஆணுக்கு நிகர் பெண் சமம், எல்லா சாதி, இனம், மத மக்களும் சமம். எல்லோரும் படிக்க வேண்டும் என்பதே மாண்புமிகு தமிழ்நாடு முதலச்ைசரின் விருப்பமாகும். இவ்வாறாகதான் அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் மூலமாக காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதையெல்லாம் அரசுப் பள்ளி மாணவர்கள் பணயன்படுத்திக்கொள்ள வேண்டும். சங்க இலக்கியப் புலவர் கபிலர் பெயரில் இயங்கும் பள்ளியில் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வது மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறது. கபிலர் குறித்து 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவனான பக்தவச்சலம் கபிலர் யார்? கபிலருக்கும் பாரிக்கும் உள்ள தொடர்பு, கபிலருக்கு தமிழ்மீது இருந்த ஆர்வம் கபிலரின் வரலாறு குறித்து அருமையாக இங்கு பேசினார். கபிலரின் தமிழ் ஆர்வம், தமிழ் உணர்வு, மொழி உணர்வு, கவிதை திறமைகளை இப்பொழுது உள்ள மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும், நாங்கள் பயின்ற காலங்களில் தமிழ் இலக்கிய மன்றம், வாரம் வாரம் பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி நடத்தப்பட்டன. இதனால் மாணவர்களின் தமிழ் மீது ஆர்வம் ஏற்படுத்தப்பட்டு பொது அறிவுத் திறன் வளர்க்கப்பட்டது. இங்குள்ள ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடப்பிரிவுகளோடு பொது அறிவுத் திறன் கல்வியை கற்றுத் தர வேண்டும். போட்டி நிறைந்த உலகத்தில் மாணவர்கள் பொது அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். மேலும், 12 ஆம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களும் நன்கு கல்வி கற்க வேண்டும். உங்களுக்காகவே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 12 ஆம் வகுப்பு முடித்து உயர் கல்வி கற்கும் பெண்களுக்கு மட்டுமே புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வந்ததை போன்று, அரசுப் பள்ளி மாணவர்களும் பயன்பெறும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நடப்பாண்டு முதல் 12ஆம் வகுப்பு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் உயர் கல்வி அரசு கல்லூரி மட்டுமல்லாமல் தனியார் கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம் உள்ளிட்ட எந்த கல்லூரியில் பயின்றாலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படவுள்ளது. ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வுகளுக்காக பயின்று வரும் மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் முதல்நிலைத் தேர்விற்கு தயாராவதற்கு மாதந்தோறும் ரூ.7,500ம், முதல் நிலை தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகையும் வழங்கும் ஓர் அற்புதமான திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார். போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு உற்சாகப்படுத்துவதற்காகவும், ஊக்கப்படுத்துவதற்காகவும் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிறப்பாக கல்வி கற்க வேண்டும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கூறியது போல படியுங்கள், படியுங்கள் என்று உங்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன் என மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கபிலர் அரசின் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பு.பாஸ்கரன் அவர்கள் வரவேற்ப்புரையும், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு.சொ.சண்முகம் அவர்கள் நன்றியுரையாற்றினார்கள். பின்னர், உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் கபிலர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் அ.சிவா,கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் திரு.மு.தங்கம், திருக்கோவிலூர் நகராட்சி தலைவர் டி.என்.முருகன், விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ம.ஜெயச்சந்திரன், முதன்மை கல்வி அலுவலர் திரு.இரா.முருகன், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News