காளி கோயிலில் சேதமடைந்த சிலைகள் அலட்சியத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள்
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் காளி கோயிலில் சேதமடைந்த சிலைகள் அலட்சியத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளதாக பக்தர்கள் வேதனை
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே பிரசித்தி பெற்ற மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் உள்ள சேதமடைந்த சிலைகளில் பராமரிப்பு பணிகள் செய்யாமல் வேஷ்டி, சேலைகளை வைத்துமறைப்பதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலும் ஒன்று. தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆடி மாதம் மற்றும் விசேஷ தினங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும், எதிரிகளை பழிவாங்க காசு வெட்டிப் போடும் பழக்கமும் இங்கு உண்டு.சிவபெருமான் மதுரை நகரின் எல்லையை கண்டறிய தனது கழுத்தில் உள்ள பாம்பை வீசிய போது தலையும் வாலும் சேர்ந்த இடமே மடப்புரம் என்று அழைக்கப்படுகிறது. இரு மாதங்களுக்கு ஒரு முறை உண்டியல் காணிக்கை மூலம் ரூ.40 லட்சம் வரை வருவாய் கிடைக்கிறது. இதுதவிர தங்கம், வெள்ளி, வெளிநாட்டு கரன்சிகள் என தனியாக ஏராளமாக வருவாய் கிடைத்து வருகிறது. அறநிலையத்துறைக்கு வருவாயை ஈட்டி தரும் கோயில்களில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலும் ஒன்று. இங்கு கடந்த 2017 ஆண்டு ஜூன் 4 ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட சில ஆண்டுகளிலேயே அம்மனின் குதிரை வாகனத்தின் கீழே இருக்கும் பூதகணங்களின் சிலைகள் சேதமடைந்தன. அதே போல அம்மனின் குதிரை வாகனமும், அய்யனார் கோயிலில் உள்ள கோபுர சிலைகள் பல இடங்களில் சேதமடைந்துள்ளது.கும்பாபிஷேகத்திற்காக எடுத்து வைக்கப்பட்ட பல சிலைகள் மீண்டும் வைக்கப்படவே இல்லை.சேதமடைந்த சிலைகளை பராமரிப்பு செய்யாமல் அவற்றை வேஷ்டி, சேலை வைத்து மறைத்து அலங்காரம் செய்து பக்தர்களை ஏமாற்றுகின்றனர். அம்மனுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பொருட்களை விசேஷ தினங்களில் கூட அணிவிப்பதில்லை. வருமானத்தை மட்டும் குறிக்கோளாக கொண்டு அறநிலையத்துறை செயல்படுவதாக பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது ஆடி மாதம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. சேதமடைந்த சிலைகளை கண்டு பக்தர்கள் மனம் வெதும்பி செல்கின்றனர். எனவே சேதமடைந்த சிலைகளை அறநிலையத்துைற புதுப்பிக்கவேண்டும். என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது