மறவமங்கலத்தில் புறக்காவல் நிலையம் மீண்டும் திறக்கப்படுமா ?

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள மறவமங்கலத்தில் கடந்த 2 ஆண்டுகளாக மூடிக் கிடக்கும் புறக்காவல் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Update: 2024-07-24 10:28 GMT
காளையார்கோவில் ஒன்றியத்தில் 43 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளுக்கு உள்பட்ட சுமார் 400 -க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் அனைத்தும் காளையார்கோவிலில் உள்ள காவல் நிலையத்தின் ஆளுகைக்குள் இருக்கின்றன. இந்தக்காவல் நிலைய ஆளுகை என்பது சுமார் 20 கிமீ சுற்றளவில் அமைந்துள்ளதால், அவசர காலங்களில் காவல் பணிக்காக போலீஸார் வெகு தொலைவுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இங்கிருந்து சுமார் 10 கிமீ தொலைவில் உள்ள மறவமங்கலம் ஊராட்சியில் கடந்த 2021 -ல் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது. இதில் ஒரு காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் 3 போலீஸார் பணியமர்த்தப் பட்டனர். இந்த புறக்காவல் நிலையத்தின் மூலம் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்களது புகார்களைத் தெரிவித்து சிரமமின்றி நிவாரணம் பெற்று வந்தனர். ஆனால், எந்தக்காரணமும் இல்லாமல் மறவமங்கலத்தில் அமைக்கப்பட்டிருந்த புறக்காவல் நிலையம் மூடப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் நடைபெறும் பல்வேறு குற்றச்செயல்களுக்கு நிவாரணம் பெற வழியில்லாமல் போனதால் பொது மக்கள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தனர். மீண்டும் மறவமங்கலத்தில் புறக்காவல் நிலையத்தை திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Similar News