சாலை பாதுகாப்புக்குழு கூட்டத்தில் ஆலோசனை

ஆலோசனை

Update: 2024-07-26 00:10 GMT
தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்களில், விபத்துகளை தடுக்கும் பொருட்டு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான சாலை பாதுகாப்புக்குழு ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். எஸ்.பி.,ரஜத்சதுர்வேதி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மாவட்டத்தில் எதிர்பாராத சாலை விபத்துகளை தடுக்கவும், சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து விபத்தில்லா மாவட்டமாக உருவாக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மற்றும் உளுந்துார்பேட்டை வட்டாரங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்கள் குறித்து காவல் துறையால் அடையாளம் காணப்பட்டது. ஏற்கனவே நடந்த கூட்டத்தில் அறிவுறுத்தியவாறு அவ்விடங்களில் நேரடி ஆய்வு செய்த விவரங்கள் குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. அதில் விபத்து ஏற்படும் இடங்களில் உள்ள எச்சரிக்கை பலகைகள், எச்சரிக்கை குறியீடுகள், மின் விளக்கு வசதிகள், உயர்மின் கோபுர மின் விளக்குகள், சாலை பாதுகாப்பு தடுப்புகள், போக்குவரத்து சிக்னல்கள், போக்குவரத்து விதிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

Similar News