மணலுார்பேட்டை அருகே வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட வி.சி., நகர பொறுப்பாளரை போலீசார் கைது செய்தனர். மணலுார்பேட்டை அடுத்த முருக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரத்தினம் மகன் சிவகுமார், 39; டிரைவர். குடும்ப வறுமையின் காரணமாக வெளிநாடு செல்லத் திட்டமிட்டார். இதற்காக மணலுார்பேட்டை - தியாகதுருகம் சாலையில் ஆர்.கே., ஏர் டிராவல்ஸ் என்ற பெயரில், வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பும் அலுவலகம் நடத்தி வரும், மணலுார்பேட்டை, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த, நாகப்பன் மகன் ரமேஷ், 40; வி.சி., மணலுார்பேட்டை நகர பொறுப்பாளரை தொடர்பு கொண்டார். வெளிநாட்டில் டிரைவர் வேலை வேண்டு மென்றால், ரூ. 1.75 லட்சம் செலவாகும் எனக் கூறினார். இதனை நம்பிய சிவக்குமார், ரமேஷின் வங்கிக் கணக்கிற்கு ஜி.பே., மற்றும் கூகுள் பே மூலம் ரூ.60 ஆயிரம் வரை அனுப்பி வைத்தார். பணம் கொடுத்து பல நாட்கள் ஆகியும் வெளிநாட்டுக்கு அனுப்பாததால், கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ், சிவக்குமாரை திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து சிவகுமார் கொடுத்த புகாரின் பேரில், மணலுார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து ரமேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.