தொடர் மழை காரணமாக தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக தடை
சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக தடை
தொடர் மழை காரணமாக தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக தடை...... தொட்டபெட்டா காசி முனை அருகில் ராட்சத மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சுற்றுலாப் பயணிகள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது...... நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த நான்கு நாட்களாக உதகை, கூடலூர், பந்தலூர், குந்தா, அவலாஞ்சி, எமரால்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக நீர் பிடிப்பு பகுதிகளான அவலாஞ்சி பகுதியில் தொடர்ந்து காற்றுடன் கூடிய தொடர் மழை பெய்து வருவதால் எமரால்டு, அவலாஞ்சி, அப்பர் பவானி, போர்த்தி மந்து உள்ளிட்ட அணைகளின் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் கனமழையின் காரணமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தும், மண்சரிவுகள் ஏற்பட்டு வருகிறது. கனமழையின் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதோடு பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு இன்று சுற்றுலா பயணிகள் தற்காலிகமாக செல்ல தடை விதிக்கப்பட்டது மேலும் தொட்டபெட்டா காட்சி முனை அருகில் ராட்சத மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதனை தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.