ராமநாதபுரம் பழுதடைந்த சாலையைசீரமைக்க பொதுமக்கள் சாலை மறியல்

சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

Update: 2024-07-29 06:59 GMT
ராமநாதபுரம் பரமக்குடி அருகே எஸ்.காவனூர் கிராமத்தில் சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பரமக்குடி - முதுகுளத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.காவனூர் கிராமம் அமைந்துள்ளது. பரமக்குடியில் இருந்து முத்துசெல்லாபுரம் வழியாக எஸ். காவனூர் கிராமத்திற்கு கிராம மக்கள் சென்று வருவது வழக்கம். இந்த சாலை சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டதால் மிகவும் சேதம் அடைந்து உள்ளது. இந்த சாலையில் அடிக்கடி விபத்துகளில் சிக்கி காயம் ஏற்படுகிறது. இரண்டு தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் டூவீலரில் இருந்து ஒருவர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேபோல் எஸ். காவனூர் கிராமத்திலிருந்து முதுகுளத்தூர் செல்லும் சாலையும் மிகவும் சேதம் அடைந்துள்ளது. இந்த இரண்டு சாலைகளை சீரமைக்க கோரி எஸ்.காவனூர் கிராம மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் சாலையை சீரமைக்க வில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த எஸ்.காவனூர் கிராம மக்கள் பரமக்குடி - முதுகுளத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் எஸ். காவனூர் பேருந்து நிறுத்தம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இரண்டு சாலைகளை சீரமைக்க கோரி 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பரமக்குடி டிஎஸ்பி சபரிநாதன், தாசில்தார் சாந்தி, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கிராம மக்களிடம் 45 நாட்களில் இந்த இரண்டு சாலைகளும் சீரமைத்து தரப்படும் என உறுதி அளித்தனர். இதனை எடுத்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலைகளை சீரமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News