தரமற்ற இலவச சைக்கிள் வழங்கப்படுவதாக மாணவர்கள் குற்றச்சாட்டு
காரைக்குடியில், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா சைக்கிள், மாணவர்களுக்கு செலவு வைக்கும் வகையில் இருப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்
சிகங்கை மாவட்டம், காரைக்குடியில் முத்துப்பட்டினம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மு.வி., மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 210 பேருக்கு சைக்கிள் வழங்கப்பட்டது. பெரும்பாலான சைக்கிள்கள் பல்வேறு குறைபாடுகளுடன் காணப்பட்டன. பெடல் இல்லாத சைக்கிள், வால் டியூப் இல்லாத சைக்கிள், தரமற்ற ஸ்டாண்ட் என ஒவ்வொரு சைக்கிளுக்கும் குறைந்தபட்சம் ஒரு பிரச்னையாவது இருந்தது. இந்த சைக்கிளை ஓட்டிக் கொண்டு செல்ல முடியாது. சைக்கிளை ஓட்டும் நிலைக்கு கொண்டு வரவே 1,000 ரூபாய்க்கு மேல் ஆகும் என பெற்றோர்கள் புலம்பினர். சில நாட்களுக்கு முன்பு இதே போன்று தரமற்ற இலவச சைக்கிள் வழங்கப்பட்டபோது முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கண்டித்ததோடு, சம்பந்தப்பட்ட ஒப்பந்தகாரரிடமே ஒப்படைத்து மாணவர்களுக்கு தரமான சைக்கிள் வழங்க கூறினார். ஆனாலும் அதேபோன்ற சைக்கிள்கள் தான் வழங்கப்படுகின்றன. எனவே விலையில்லா என்பதை விட மாணவர்களுக்கு செலவில்லா சைக்கிள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.