மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம்கள்
சிவகங்கை மாவட்டம், ”மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் வருகின்ற 07.08.2024 அன்று எஸ்.புதூர் வட்டாரத்திற்குட்பட்ட 07 கிராமங்களுக்கும் மற்றும் காளையார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட 08 கிராமங்களுக்குமான முகாம்கள் குறிப்பிட்ட இடங்களில் நடைபெறவுள்ளது
சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ஊரக பகுதிகளிலுள்ள பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில், கடந்த 11.07.2024 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள ”மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் வருகின்ற 07.08.2024 அன்று ”மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம் எஸ்.புதூர் வட்டாரத்திற்குட்பட்ட உரத்துப்பட்டி, வாராப்பூர், குளத்துப்பட்டி, மந்தகுபட்டி, நெடுவயல், புதூர், செட்டிக்குறிச்சி ஆகிய கிராமங்களுக்கென வாராப்பூர் சமுதாயக்கூடத்திலும் மற்றும் காளையார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட தென்மாவளி, கொட்டகுடி, பாகனேரி, காடனேரி, நகரம்பட்டி, அம்மன்பட்டி, காளையார்மங்கலம், சொக்கநாதபுரம் ஆகிய கிராமங்களுக்கென சொக்கநாதபுரம் ஊராட்சி, கத்தப்பட்டு, தொட்டியத்து கருப்பர் கோவில் திருமண மண்டபத்திலும் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை மேற்குறிப்பிட்டுள்ள இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளது. இம்முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, எரிசக்தித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, கூட்டுறவுத்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் என மொத்தம் 13 துறைகள் தொடர்பான சேவைகள் குறித்த மனுக்களை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.