சொர்ணவல்லி அம்பிகை சமேத சொர்ணகாளீஸ்வரர் கோயில் ஆடிப்பூர உற்சவத் திருவிழா

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் உள்ள சொர்ணவல்லி அம்பிகை சமேத சொர்ணகாளீஸ்வரர் கோயில் ஆடிப்பூர உற்சவத் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.

Update: 2024-08-06 11:16 GMT
சிவகங்கை தேவஸ்தானம் காளையார்கோவில் சொர்ணவல்லியம்மன் சமேத சொர்ணகாளீஸ்வரர் கோயிலில் ஆடிப் பூர உற்சவ விழா அம்மன் சந்நிதியில் ஜூலை 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். முக்கிய நிகழ்வான ஆடிப்பூரத் தேரோட்டத்தை முன்னிட்டு, இன்று(ஆக.06) அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து அம்மன் தேருக்கு எழுந்தருளினார். பின்னர் பக்தர்கள் வடம் பிடிக்க காலை 9 மணி அளவில் தேர் புறப்பட்டது. கோயிலைச் சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்த தேர் சுமார் 10 மணியளவில் நிலையை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில், காளையார்கோவில், சிவகங்கை, நாட்டரசன்கோட்டை, கொல்லங்குடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து புதன்கிழமை ஆடிப்பூர விழாவும், வியாழக்கிழமை மாலை தபசுக் காட்சியும், வெள்ளிக்கிழமை (9.8.2024) பகல் 12 மணி முதல் 1 மணிக்குள் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் திருக்கல்யாணமும், அதனை தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற உள்ளது.

Similar News