மூடப்பட்ட டாஸ்மாக் கடை போலீஸ் மீண்டும் திறப்பு

திறப்பு

Update: 2024-08-08 02:31 GMT
நுாரோலையில் லோக்சபா தேர்தலையொட்டி மூடப்பட்ட டாஸ்மாக் கடை, மூன்றரை மாதங்களுக்கு பிறகு போலீஸ் பாதுகாப்புடன் நேற்று திறக்கப்பட்டது. ரிஷிவந்தியம் அடுத்த நுாரோலை கிராமத்தில், கீழ்பாடி செல்லும் சாலையில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. மதுபிரியர்கள் அப்பகுதியில் சாலையிலேயே அமர்ந்து, மது அருந்துவதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் சிரமமடைந்தனர். இதனால், டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி கடந்த 8 மாதங்களுக்கு முன் பெண்கள் முற்றுகையில் ஈடுபட்டனர். தகவலறிந்த ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன், டாஸ்மாக் கடையால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேறு இடத்திற்கு டாஸ்மாக் கடையை மாற்றுமாறு சூப்பர்வைசர் ராஜேந்திரனிடம் தெரிவித்தார். இதனையடுத்து டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடப்பட்டு, வெள்ளை நிற துணியால் சுற்றி மூடப்பட்டது. இந்நிலையில், மூன்றரை மாதங்களுக்கு பிறகு நுாரோலை டாஸ்மாக் கடை மீண்டும் நேற்று திறக்கப்பட்டது. இதையொட்டி, திருக்கோவிலுார் டி.எஸ்.பி., குகன்(பொ), இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்தல் நேரத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.

Similar News