காளையார்கோவில் பேரூராட்சியாக தரம் உயர்வு??
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்துவதற்கான அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
காளையார்கோவில் ஊராட்சியை, பேரூராட்சியாக தரம் உயர்த்துவதற்கான சாத்திய கூறுகளை, அரசுக்கு அறிக்கையாக சமர்பித்துள்ளதால், விரைவில் பேரூராட்சியாக தரம் உயர்வதற்கான அறிவிப்பு வெளியாகும் என காளையார்கோவில் மக்கள் எதிர்பார்க்கின்றனர். காளையார்கோவில் கிராம ஊராட்சி 12.5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து காணப்படுகிறது. காளையார்கோவிலை மையமாக வைத்து அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம், அரசு, தனியார் பள்ளிகள், 12 க்கும் மேற்பட்ட தேசிய வங்கிகள், டெக்ஸ்டைல் மில் உள்ளன. இந்த ஊராட்சியின் கீழ் 35 அரசு அலுவலகம் இயங்கி வருகிறது. பணி காரணமாக காரைக்குடி, மறவமங்கலம், சிவகங்கை, தேவகோட்டை, தொண்டி ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். இங்கிருந்து சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டையில் உள்ள தனியார் பள்ளிகளில் படிக்க தினமும் நுாற்றுக்கணக்கான மாணவர்கள் சென்று வருகின்றனர். 2017 ம் ஆண்டு இந்த ஊராட்சி எல்கைக்குள் 3,700 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டு, வீட்டு வரி செலுத்தினர். இன்றைக்கு ஊராட்சி எல்கைக்குள் மட்டுமே 14,000 வீடுகள் வரை கட்டப்பட்டு வளர்ந்த நகராக காட்சி அளிக்கிறது. இந்த ஊராட்சிக்கு தொழில், வீட்டு வரி மூலம் ஆண்டுக்கு ரூ.70 லட்சம் வரை கிடைக்கிறது. பேரூராட்சி அறிவிப்பு முதலிடத்தில் ஒரு ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த, மக்கள் தொகை 10,000 க்கு மேல் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். ஆனால், இந்த ஊராட்சியின் மக்கள் தொகை 30,000 க்கு மேல். வரி வருவாய் மூலம் ஆண்டுக்கு ரூ.70 லட்சம் வரை கிடைக்கிறது. அரசுக்கு அறிக்கை சமர்பிப்பு சிவகங்கை ஊராட்சிகள் உதவி இயக்குனரக அலுவலர் கூறியதாவது: காளையார்கோவிலை பேரூராட்சியாக தரம் உயர்த்த தேவையான சாத்திய கூறுகள் குறித்த அறிக்கையை அனுப்பிவிட்டோம். சட்டசபையில் பேரூராட்சி தரம் உயர்வு குறித்த நடைமுறையை எளிமைபடுத்தியுள்ளனர். இதனால், காளையார்கோவில் பேரூராட்சியாக விரைவில் தரம் உயர்த்துவதற்கான அறிவிப்பு வரும் என அரசிடம் இருந்து எதிர்பார்க்கிறோம், என்றனர்.