பழைய இருசக்கர வாகனங்கள் விற்கும் கடையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து
பழைய இருசக்கர வாகனங்கள் விற்கும் கடையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து
காரியாபட்டியில் பழைய இருசக்கர வாகனங்கள் விற்கும் கடையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து - 30 -க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதம் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி - கள்ளிக்குடி சாலையில் இலுப்பைகுளத்தை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் பழைய இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் கடை அடைத்து விட்டு வீடு சென்றுவிட்டார். அதனைத் தொடர்ந்து இரவு 1 மணிக்கு மேல் தீடிரென்று இருசக்கர வாகனங்கள் விற்கும் கடையில் தீ மளமளவென பிடித்து எரிந்துள்ளது. அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் உடனடியாக காரியாபட்டி தீயணைப்பு மற்றும் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அருகில் இருந்த மற்ற கடைகளுக்குள் பரவாமல் தீயை அணைத்து தடுத்தனர். பின்னர் கடைக்குள் சென்று பார்த்தபோது கடையில் இருந்த சுமார் 80-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் 30-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் முற்றிலும் எரிந்து சேதமானது தெரியவந்தது. மற்ற இருசக்கர வாகனங்கள் ஒரு சில பகுதிகள் தீயில் எரிந்த நிலையிலும் இருந்தன. சம்பவ இடத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் மாவட்ட அலுவலர் விவேகானந்தன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மற்றும் காரியாபட்டி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் தீயில் எரிந்த இருசக்கர வாகனங்களை பார்வையிட்டனர். மேலும் இந்த தீ விபத்து மின் கசிவினால் ஏற்பட்டதா, அல்லது இருசக்கர வாகனங்களில் ஏதேனும் கோளாறா, அல்லது மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என காரியாபட்டி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தில் சுமார் 30 லட்சம் மதிப்பீட்டிலான பொருட்கள் எரிந்து சேதமானதாக தகவல் வெளியாகி உள்ளது. இரவு நேரத்தில் பூட்டிய கடையில் 30 - க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து கருகியதால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.