மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்ட கிராம மக்களால் பரபரப்பு.
சிவகங்கையில் நிலமற்ற ஏழை எளியோர்களுக்கு அரசால் வழங்கப்படும் இலவச வீட்டு மனை பட்டா பயனாளிகளை தேர்வு செய்வதில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்ட கிராம மக்களால் பரபரப்பு.
சிவகங்கை மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் ஊராட்சி ஒன்றியக் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே குன்றக்குடியில் நிலமற்ற ஏழை எளிய மக்களுக்கு அரசு வழங்கும் இலவச நத்தம் வீட்டுமனைப் பட்டா பயனாளிகள் தேர்வு செய்வதில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கூட்டரங்கில் ஆட்சியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஆட்சியரிடம் கோரிக்கை மனுவினை கிராம மக்கள் சார்பில் வழங்கப்பட்டது. அதில் இலவச வீட்டு மனை பட்டா பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டதில், நிலம் இருப்பவர்களுக்கும், பணம் வசதி படைத்தவர்களுக்கும் மற்றும் ஒரே குடும்பத்தைச் சார்ந்த நபர்களுக்கும் ஏற்பாடு செய்வதாக தெரிகிறது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏழை எளிய மக்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும், எனவே தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளை மீண்டும் ஆய்வு செய்தும், விடுபட்ட முறையான பயனாளிகளை தேர்வு செய்யவும் விண்ணப்பித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தேவகோட்டை கோட்டாச்சியர் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனை ஏற்றுக் கொண்ட கிராம மக்கள் கலைந்து சென்றனர்.