முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

கைது

Update: 2024-08-12 03:04 GMT
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் விக்ரமன், அருள்ஜோதி, பூபதி. வேலைக்கு வெளிநாடு செல்வதற்காக மூவரும், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் டிராவல் ஏஜன்சி நடத்தி வரும் தேன்பாக்கத்தைச் சேர்ந்த கோடீஸ்வரன், 47, என்பவரிடம் தலா, 1.5 லட்சம் ரூபாய் பணம் கொடுத்திருந்தனர். கோடீஸ்வரன் மூவரையும் வெளிநாடு அனுப்பாமலும், பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றினார். கோடீஸ்வரன் ஏமாற்றியது குறித்து அவரது நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டு, சமூக வலைதளத்தில் அவர்கள் தங்களுக்கு நேர்ந்தது குறித்து தகவல் வெளியிட்டனர். ஆத்திரமடைந்த கோடீஸ்வரன், அவர்களை பழி வாங்க, தன்னிடம் பணம் அளித்த விக்ரமன் பெயரில், கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம் அனுப்பினார். அதில், 'கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் சம்பந்தமாக தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும். இல்லையெனில் முதல்வர், அவரது மகன் மற்றும் கள்ளக்குறிச்சி எஸ்.பி.,யை சுட்டுக் கொன்று விடுவேன். கட்சி அலுவலகம், டாஸ்மாக் கடை மற்றும் எஸ்.பி., அலுவலகத்தை குண்டு வைத்து தகர்த்து விடுவேன்' என, குறிப்பிட்டிருந்தார். கடிதத்தில் இருந்த முகவரியின்படி, விக்ரமனிடம் போலீசார் விசாரித்தனர். அதில், அவரது பெயரை தவறாக பயன்படுத்தி, கோடீஸ்வரன் அனுப்பிய கடிதம் என்பது தெரிந்தது. அதன்படி போலீசார், கோடீஸ்வரனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Similar News