கடல் அரிப்பால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல்
அதானி துறைமுக விரிவாக்க பணி நடைபெறுவதால் கடலில் கொட்டப்படும் மண்ணால் கடற்கரை ஓரங்களில் கடல் அரிப்பு ஏற்பட்டு மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது
அதானி துறைமுக விரிவாக்க பணி நடைபெறுவதால் கடலில் கொட்டப்படும் மண்ணால் கடற்கரை ஓரங்களில் கடல் அரிப்பு ஏற்பட்டு மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது அரசு உரிய ஆய்வு மேற்கொண்டு விரிவாக்க பணிகளால் கடற்கரை ஓர கிராமங்களில் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம்,எண்ணூர் முகத்துவாரம் முதல் பழவேற்காடு முகத்துவாரம் வரை காமராஜர் துறைமுகம் காட்டுப்பள்ளி துறைமுகம் அதானி துறைமுகம் என துறைமுகங்கள் உருவாகி பெரும் நிறுவனங்களாக இப்பகுதி மாறி உள்ளது. குறிப்பாக அதானி துறைமுகம் மற்றும் அதன் விரிவாக்க திட்டங்கள் இப்பகுதியில் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது அதானி துறைமுகத்தின் விரிவாக்கப் பணிகள் மூலம் கடலுக்குள் கொட்டப்பட்டுள்ள கற்களால் கடற்கரை முற்றிலுமாக அழிந்து வருகிறது. சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கரை தூர்ந்து கரையில் இருந்த மணல் கடலில் கரைந்துள்ளது. மேலும் கடற்கரையில் உள்ள மரங்கள் செடிகள் வேரோடு கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.இதனால் இப்பகுதியில் மீன் பிடிக்கும் மீனவர்கள் வலைகளில் இந்த மரங்களும் செடிகளும் மீன் பிடி வலைகளில் சிக்கி அவைகள் நாசமாவதுடன் மீன்பிடி தொழிலும் பாதிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் காட்டுப்பள்ளி பகுதியில் அமைந்துள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்திற்கு பின்பக்கத்தில் கடற்கரையை ஒட்டி முற்றிலுமாக கரை கடலுக்குள் சென்று விட்டதால் பாதிப்புக்கு உள்ளாகும் சூழல் ஏற்பட்டது. இதனால் கடல் நீரை குடிநீராக்கும் நிலைய திட்ட அலுவலர்கள் இதுகுறித்து அதானி துறைமுகத்திடம் ஏற்கனவே தகவல் அளித்துள்ளனர்.அதானி துறைமுக நிர்வாகம் கடலில் இருந்து மணலை ராட்சத மண் அள்ளும் பெரிய இயந்திரங்கள் மூலமாக (டிரட்ஜர்) மணலை எடுத்து அப்பகுதியில் தற்காலிக கடற்கரை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெறாமல் கடலில் இருந்து மண்ணை எடுத்து தற்காலிக கரை அமைக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டு வருவதால் கடற்கரையின் நீரோட்டம் காரணமாக மீண்டும் மணல் கடலுக்குள்ளே கரைந்து வருகிறது. இதனால் பல டன் மணல் வீணாகி வருவதுடன் இப்பகுதி மீனவர்களுக்கு மீன் பிடிக்க முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. இந்த கடல் அரிப்பால் பழவேற்காடு பகுதி வரை உள்ள சுமார் 25க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் பாதிப்பு உள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு இங்கு ஆய்வு செய்து கடல் அரிப்பு ஏற்படாமல் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.