கபிலர்மலையில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் மாவட்ட ஆட்சியர் உமா மனுக்களை பெற்றுக்கொண்டார்.

பரமத்தி வேலூர் வட்டம் கபிலர்மலையில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்கள்  நடைபெற்று வருவதை பார்வையிட்டு பொதுமக்களிடமிருந்து  கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

Update: 2024-08-13 13:24 GMT
பரமத்தி வேலூர் வட்டம் கபிலர்மலையில் மக்களுடன் முதல்வர் திட்டம் கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமை வகித்தார். திட்டகுழு உறுப்பினர் மதுரா செந்தில் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா மனுக்கை பெற்றுக்கொண்டு பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு முழுவதிலும் மக்கள் அரசிடம் எதிர்பார்க்கும் எந்த ஒரு கோரிக்கையையும் விடுபடாமல் கனிவுடன் ஏற்று பரிசீலித்து உரிய முறையில் தீர்வு கண்டு மக்கள் அனைவரும் மனநிறைவுடன் வாழ்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை உறுதியுடன் மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டு மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். அதன்படி முதற்கட்டமாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம்கள் நடத்தப்பட்டு, முகாம்களில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது 30 நாட்களில் தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அதேபோல் இப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி கொண்டு மின் இணைப்பு பெயர் மாற்றம், புதிய மின்னணு குடும்ப அட்டை, விவசாய கடன், தொழில் கடன், பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை, தொழிலாளர் நலவாரிய அட்டை வேண்டிய மனுக்களை அளிக்கலாம். மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களில் பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் முகாம் நடைபெறும் இடங்களில் இ-சேவை மூலம் பதிவு செய்யப்பட்டு உடனடியாக பதிவு இரசீது வழங்கப்படும். மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களில் 15 துறைகள் சார்ந்த கோரிக்கைகளைப் பெற்று 30 தினங்களுக்குள் தீர்வு காணும் வகையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இந்த இரண்டாம் கட்டத்தில், ஊரகப்பகுதிகளில் மக்கள் பயன்பெறும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ்  பொதுமக்கள் அதிகளவில் அணுகும் அரசுத் துறைகளான, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை, எரிசக்தித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடுத் துறை, வேளாண்மை-உழவர் நலத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை உள்ளிட்ட 15 துறைகள் சார்ந்த 44 வகையான கோரிக்கைகள், 30 தினங்களுக்குள் தீர்வு காணும் வகையில் முதலமைச்சர் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இம்முகாம்களை பொதுமக்கள் தவறாமல் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுவின் அடிப்படையில் 1 பயனாளிக்கு குடும்ப அட்டையில் பெயர் மற்றும் முகவரி திருத்த ஆணை, 5 நபர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தனி நபருக்கான அடையாள அட்டை, மகளிர் திட்டம் சார்பில் 3 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.61.00 இலட்சம் மதிப்பில் கடனுதவி,3 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டார்.   இம்முகாமில் தி.மு.க கபிலர்மலை ஒன்றிய செயலாளர் சண்முகம், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.ச.பிரபாகரன்,  மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News